Subscribe:

செவ்வாய், 25 டிசம்பர், 2012

என் தாயாருக்காக துஆ செய்யுங்கள்...

இன்று டிசம்பர் 26...

என் தாயார் சு.ஹமீதா பீவி அவர்கள் வபாத்தான (மறைந்த) நாள்...

மூன்றாண்டுகள் கடந்துவிட்டது ஆனாலும் என் தாய் இன்றும் என்னுடனேயே இருப்பது போன்ற உணர்வு...

மரணம் என்பது மனிதவாழ்க்கையில் தவிர்க்கமுடியாதது,,, எல்லோரும் ஒருநாள் இறையவனின் அழைப்பை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்... என் தாய் மரணித்ததும் எதார்த்தமான ஒன்றுதான்...

என் குடும்பத்தில் என்னையும் சேர்த்து ஏழுபேர்... நான் ஆறாவதாக பிறந்தவன்... எனக்கு முன்பாக 5 சகோதரிகள்... ஐந்து பெண்களை பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என நமது கிராமபுரங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்... ஆனால் என் தகப்பனார் மர்ஹும் நூ.ச.சுல்தான்மைதீன் அவர்கள் தனது கடுமையான உழைப்பால் எங்களை செல்வசெலிப்புடன் வளர்த்தினார்கள்... அதற்க்கு என் தாயாரும் சிக்கனமான சீரான வரவு செலவுகளுடன் குடும்பம் நடத்தி என் தகப்பானார் அவர்களின் எண்ணங்கள் ஈடேற துணைநின்றார்...

இளையான்குடி கீழமுஸ்லிம் தெருவில் நுழைவிலேயே அமைந்திருக்கிறது எங்கள் வீடு... பிரம்மாண்டமாக எழுந்துநின்று வருவோரை வரவேற்கும்... என் எங்கள் வீடு கட்டிமுடிக்கபட்டபோது நான் பிறந்திருக்கவில்லை... அப்போது எங்கள் தெரு கிழவிகள் என் தாயாரை ஏளனமாக பேசுவார்களாம் "அஞ்சையும் பொட்டையா  பெத்துவஜ்சுகிட்டு எதுக்கு இத்தாம்பெரிய பங்களா" என் தாயார் கண்ணிருடன் அல்லாஹுவிடம் முறையிடுவாராம்...

1973ல் நான் பிறந்தேன் என் தாயும் தந்தையும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லையென எங்கள் தெருவில் வசித்த அப்பாமார்களும் மாமம்மாக்களும் சொல்லக்கேடிருக்கிறேன்... நான் ஆண்பிள்ளையாக பிறக்க வேண்டுமென எண்ணிலடங்கா பிரார்த்தனைகளுடன் வாழ்ந்திருக்கிறார் என் தாய்... ஆம் பிறந்தவுடன் தனது வேண்டுதலை நிறைவேற்ற குளக்கரையில் தேங்கிக்கிடக்கும் பாசியை வழித்து உண்டார் என என் சகோதரிகள் சொல்லியிருக்கிறார்கள்... அதனை ஒருமுறை என் தாயாரே எங்கள் வீட்டிருக்கு வந்திருந்த தலைவர் ஷஹீத் பழனிபாபா அவர்களிடம் சொல்லும்போது கேட்டிருக்கிறேன்...

எனக்கு அடுத்ததாக ஒரு தம்பி... எனக்கு 12 வயதானபோது என் தகப்பனார் அவர்கள் புற்றுநோயால் மரணித்தார்கள்... என் சகோதரிகள் ஐவரையும் நல்ல இடங்களில் மணமுடித்து கொடுத்தபிறகே ஒரு தகப்பனுக்குரிய அனைத்து கடமைகளையும் நிறைவேற்றிய பிறகே என் "அத்தா" காலமானார்கள்... ஆண்பிள்ளை இல்லாத குடும்பம் என்பதால் என் பள்ளிக்கூட பையை பரண்மேல் போட்டுவிட்டு அப்போதே மலேசியாவிற்கு பயணமானேன்... அந்த வயதில் எனக்கு உணவகத்தில் கொடுக்கப்பட்ட வேலை தட்டு கழுவுவது... குவளைகளை கழுவது... கழிப்பறைகளை சுத்தம் செய்வது... மாத சம்பளம் இந்திய ரூபாய் 500
அந்த சொற்ப பணத்திலும் என் தாய் என் தம்பிக்கு வேண்டியதை செய்துவிட்டு என் சகோதரிகளுக்கும் எந்தக்குறையும் இல்லாமல் பார்த்துகொண்டார்...

எல்லா தாய்மார்களும் தங்களது பெண்பிள்ளைகள்  மேல்தான் அதிகமான அன்புகாட்டுவார்கள் என நான் கேள்விபட்டிருக்கிறேன்... ஆனால் என் தாய்க்கு நானும் என் தம்பியும் தான் எல்லாம்... கவலையே என்னவென்று தெரியாமல் எங்களை வளர்த்திட்ட எங்கள் தாய்... மகனை மணக்கோலத்தில் காணவேண்டும் என்கிற ஆவலில் எனது 20வது வயதிலேயே எனக்கு மணமுடித்தார்கள்... அடுத்து என் தம்பிக்கும் திருமணமானது...

என் சகோதரிகள் ஏதோ ஒரு சூழலில் என் தகப்பனார் மிதிவண்டியில் பலகாரவகைகளை தயாரித்து எடுத்துகொண்டு பல மையில்கள் சுற்றி அலைந்து விற்று ஈட்டிய பொருளில் கட்டிய எங்கள் மாளிகையை விற்க வேண்டுமென ஆர்வம் காட்டினார்கள்... இறுதியாக அவர்களின் ஆர்வமமே வென்றது... என் தாயார் மனத்தால் அன்றைக்கே இறந்துவிட்டார்... இறுதி காலங்களில் என் தாயார் என் சகோதரிகள் மற்றும் என் தம்பியுடன்தான் வசித்தார்கள்... நான் தனியாக (சொந்த வீட்டை இழந்துவிட்டோம் என்கிற விரக்தியில்) வசித்தேன்...

ஒரு நாள்... மலேசியாவில் நள்ளிரவு என் அக்கா எனது அலைபேசிக்கு அழைப்புவிடுத்தார் அம்மா உன்னிடம் பேச வேண்டுமாம் என்றார்...

என் அம்மாவிடம் பேசினேன் இபுராஹிம் நல்ல இருக்கியாமா... என் தாயாரின் குரலில் எப்போதும் உள்ள கம்பீரம் இல்லை... அம்மா நான் நல்ல இருக்கேமா நீங்கள் நல்ல இருக்கீங்களா? நல்ல இருக்கேன்மா ஆனா அம்மா இன்னும் ரொம்ப நாளைக்கு இருக்க மாட்டேன்மா... உன்னை பார்க்கணும்போல இருக்கு அம்மா மவுத்தா போறதுக்குள்ள வந்து பார்த்துரும்மா... என்றார்கள்... அம்மா அப்படியெல்லாம் பேசாதீர்கள் அல்லாஹ் உங்களுக்கு எந்த கஷ்டத்தையும் தரமாட்டான்... இன்ஷாஅல்லாஹ் நான் எப்படியும் ஒரு வாரத்தில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வைத்தேன்...

மறுநாள் காலை வழக்கம்போல பரபரப்பான வேலைகளில் நான் மூழ்கி இருந்த வேலை என் மனைவியிடமிருந்து அழைப்பு... ஹலோ என்றேன் என் மனைவியின் குரல் அழுகையாகமட்டுமே கேட்டது என்ன என்றேன்... மாமி (என் அம்மா) இறந்துவிட்டார்கள் என்றால்... என் இதயம் சில நிமிடங்கள் தனது இயக்கத்தை நிறுத்தியது... என்னையறியாமல் என் விழிகளில் கடலின் கொந்தளிப்பு கொப்பளித்து... சில மணிநேரங்களுக்கு முன்பாக என்னிடம் பேசிய என் தாய் இறந்துவிட்டார் என்கீற செய்தியை என்னால் நம்பமுடியவில்லை...

என்னை திடபடுத்திகொண்டு உடனடியாக தாயகம் நோக்கி பயணமானேன்...

என் வருகைக்காக என் சொந்தங்கள் நண்பர்கள் என ஒரு பெரும் கூட்டமே காத்திருந்தது... என்னை கண்டதும் என் சகோதரிகளின் வெடித்துசிதறிய அழுகுரல் என்னை சுக்குநூறாய் சிதரசெய்தது... எப்போதும்  நான் தாயகம் வந்துவிட்டால் வாசலில் வந்து நின்று என்னை ஆரத்தழுவி வரவேற்கும் என் தாய் இப்போது என் சகோதரியின் வீட்டு மத்தியில் கிடத்திவைக்கபட்டு இருந்தார்...

எங்கள் அம்மா அல்லாஹுவின் அழைப்பை ஏற்றுகொண்டார்... இனி நான் செய்யவேண்டியது என் தாயின் மறுமை வாழ்விற்கான துஆக்கள்தான்... ஆனால் என் மனதில் இன்றைக்கும் உருத்திகொண்டிருக்கும் எண்ணம் நான் என் அம்மாவிற்கு செய்யவேண்டிய கடமைகளை முழுமையாக செய்தேனா??? என் அம்மா எங்களுக்காக செய்த தியாகங்கள் சொல்லிமாளாது...

கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் என் தாயார் இந்த உலகவாழ்க்கையை நிறைவு செய்து பயனபட்டார்கள்...

தலைவர் ஷஹீத் பழனிபாபா அவர்கள் என் தாயார் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தார் என் தாயாரும் என் மூத்தமகன் பழனிபாபா தான் என பெருமையாக சொல்வார் தலைவர் பாபா ஒருமுறை என் தாயாரிடம் சொன்னார் நீங்க ஏனம்மா கவலைபடுறீங்க... நீங்க ஒரு நல்ல பிள்ளைக்கு தாய் என்பதைவிட உங்களுக்கு என்ன வேண்டும்... ஆம் என் தாயாரை யாரும் குறைசொல்லமுடியாதபடி நானும் என் கடமையை செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன்... இருப்பினும் நான் என் தாயாரின் மனம் நோகும்படி நடந்திருந்தால் அல்லாஹ் என்னை மன்னிக்க வேண்டி துஆ செய்யுங்கள் என் இனமான உறவுகளே... அதேபோல என் அம்மா அத்தா ஆகியோரின் சுவன வாழ்க்கையை அல்லாஹு பிரகாசமாகிவைத்திட துஆ செய்யுங்கள்...

வேங்கை.சு.செ.இப்ராஹிம்