Subscribe:

புதன், 30 மார்ச், 2011

எனக்காக என் மனைவி மக்களுக்காக துஆச் செய்யுங்கள்...

என் இனிய சகோதர சொந்தங்களே...
நம் அனைவர் மீதும் ஏக இறையவனின் சாந்தியும் சமாதானமும்
பொழியபடட்டுமாக...
 
இன்று (31.03.2011) எனது வாழ்க்கை துணையாக
ரோஸ்மின் பேகத்தை அல்லாஹ் இணைத்த 17 ம் ஆண்டின் துவக்கம்...
அல்ஹம்துலில்லாஹ்...
அன்பான மனைவியையும் அறிவான பிள்ளை செல்வங்களையும்
எனக்களித்த அளப்பரிய கருணையாளன் அல்லாஹுவுக்கே நன்றிகள் அனைத்தும்...
 
வாழ்கையில் பல ஏற்றங்கள் எதிர்பாராத வீழ்ச்சிகள்....
நான் துவண்டுபோகாமல் என் துணையிருக்கும் மனைவி...
எதிர்பார்ப்புகள் நிரம்ப உள்ள மழலை பருவத்திலும் எனக்காக
எதையும் எதிர்பார்க்காமல் அன்பு பாராட்டும் என் அருமை செல்வங்கள்...
அமீருல் முஜாஹிதீன் (15), சுல்தான் ரிபாசுதீன் (11) அப்ரின் ஷமீராஹ் (6)
 
இந்த வேளையிலே கடந்தகால சம்பவங்களை நினைவுகூறி அல்லாஹுவிற்க்கு
நன்றிகூற கடமைபட்டுள்ளேன்...
 
விரக்தியின் விளிம்பில் நான் நின்ற போது...
எதிர்பார்த்தவர்கள் எல்லாம் எனக்கு ஏமாற்றத்தை தந்தபோது...
கண்ணுக்கு தெரியாத வகையில் எனக்கு எனதருமை சகோதர சொந்தங்கள் 
சிலர் மூலமாக நம்பிக்கை கொடுத்தான் என் இறைவன்... அல்லாஹு அக்பர் 
 
இதயநோயால் அவதியுற்று அனுமதிக்கபட்டேன் மருத்துவமனையில் 
சிகிச்சைக்கு பணமில்லை...   லட்சங்களில் பணம் வேண்டும் என்றனர்...
லட்சியங்களை மட்டுமே சேர்த்துவைத்த நான் லட்சங்களை சேர்க்க தவறிவிட்டேன்...
எதிர்பாராமல் கிடைக்கபெற்ற இனிய வாழ்வையும் என் திட்டமிடல் இல்லாத செயலால்
நானே இழந்துவிட்டேன்... மருத்துவமனையின் படுக்கை மரணத்தை என் கண்களில்
நிழலாட செய்தது... மரணம் என்றிருந்தாலும் வரபோகிற ஓன்று... அதை எதிர்பார்த்துதானே
இந்த அற்பமான வாழ்க்கை...
 
ஆனாலும்
என் அன்பு மனைவி எனதருமை குழந்தைகளுக்கு இந்த உலக வாழ்க்கைக்கு
தேவையான எதையுமே சேர்த்து வைக்கவில்லையே... எனக்கு பின்னால்
என் மனைவி மக்கள் அனாதைகள் ஆகிவிடுவார்களே... என்னையும் அறியாமல்
என் விழிகளில் கண்ணீர் சுனாமியாக சுழன்று வடிந்தது... செய்வதறியாது
என் மனைவி கைகளில் முகம்புதைத்து கதறினாள்...
 
கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவளிக்கும் கருணையாளன் அல்லாஹுவின்
ஆழகடலைவிட  ஆழமான அன்பை இரக்கத்தை உணர்வுபூர்வமாக உணர்த்தினான்...
எதார்த்தமாக நான் அனுமதிக்கபட்டிருந்த மருத்துவமனைக்கு வந்திருந்த நண்பர்
என் நிலையை எனது மரியாதைக்கும் நட்பிற்கும் உரிய சகோதரர் ஒருவருக்கு
தெரியபடுத்தினார்...
 
என்ன அற்புதம் அடுத்த சில நிமிடங்களில் நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
என் இறைவனுக்காக ஏற்றுக்கொண்ட பொதுவாழ்க்கை எனக்கு தந்த சொந்தங்கள்
திரளாக வந்துவிட்டனர்... அல்ஹம்துலில்லாஹ்...
 
அவர் அனைவரும் மருத்துவரிடம் எங்கள் வேங்கை எங்களுக்கு வேண்டும்
பணத்தை பற்றிய கவலை இல்லை உடணடியாக சிகிச்சை செய்யுங்கள் நாங்கள்
பணத்தோடு வருகிறோம் என்றனர்... மேற்சிகிசைக்கு மதுரைக்குத்தான் அழைத்துசெல்ல
வேண்டும் என்ற மருத்துவர் அதுவும் சில மணி நேரங்களில் கொண்டுசெல்ல வேண்டும்
என்றார். அதற்க்கான ஏற்பாடுகளை உடணடியாக மேற்கொண்டு நான் மதுரைக்கு
அழைத்து செல்லப்பட்டு மீனாட்சி மிஷின் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில்
அனுமதிக்கப்பட்டேன்.
 
முதலுதவிகள் செய்து மறுநாள் காலையில் இருதய சிகிச்சை மேற்கொண்டார்கள்...
அல்லாஹ் பெரியவன்... அல்லாஹ் பெரியவன்... அல்லாஹ் பெரியவன்...
என் மனைவியின் கதறல்... என் பிள்ளைகளின் கண்ணீர்... என் நட்பு உறவுகளின் துஆக்கள்...
அல்லாஹ் என்னை எளிதாக குணமாக்கினான்... அறுவை சிகிச்சை இல்லாமல்
ஆஞ்சியோகிராம் சிகிச்சை மூலமாகவே எனது இரத்தகுழாய் அடைப்புகள் நீக்கப்பட்டது...
 
சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பியதும் எனது மின்னஞ்சல் வரவுகளை பார்த்தேன்...
மாஷாஅல்லாஹ் எனக்காக உலகெங்கிலும் என் சகோதர சொந்தங்கள் ஜாதி மதங்களுக்கு
அப்பாற்பட்டு துஆ செய்திருந்த அன்பைகண்டு இப்போதும் என் கண்களில் கண்ணீர் துளிகள்...
 
ஆம்
அல்லாஹ் நான் செய்யவேண்டிய பணிகள் தேடவேண்டிய பாவமன்னிப்புகள்
இன்னும் அதிகமாக இருப்பதனாலேயே என்னை குணமாக்கினான்...  அதை உணர்ந்தவனாக
என் கடந்த 36 ஆண்டுகால பயணப்பாதையை மாற்றி பயணிக்க துவங்கி உள்ளேன்...
 
என் இறைவா...
உன்னால் படைக்கப்பட்ட  பலகீனமான மனிதபிறவி நான் என் மனதறிந்து
எந்த பாவமான காரியங்களும் செய்யவில்லை என்றாலும் என்னையும்
அறியாமல் ஏதேனும் பாவங்கள் செய்திருந்தால் என்னுடைய கடந்தகால நன்மையான
காரியங்களின் பலனை அதிகரித்து பாவ செயல்களின் தண்டனையிலிருந்து
எனக்கு பாவமன்னிப்பு வழங்கு...
 
என் வாழ்க்கை துணையான நாள் முதல் எந்த சுகத்தையும் சுவாசிக்காத என் மனைவிக்கு
நான் நல்ல கணவனாக... எனக்கு பிள்ளைகளாய் பிறந்து என்னை முழு மனிதனாக்கிய
எனதருமை செல்வங்களுக்கு நல்ல தகப்பனாக... என்னை இன்றளவும் மரியாதையோடும்
மனிதநேயதோடும் நட்பு பாராட்டும் என் சமுதாய சொந்தங்களுக்கு நல்ல சேவகனாக...
உன் அன்பை பெரும் ஹலாலான வாழ்க்கையை எனக்கு கொடு...
 
எனக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி... என்னால் மற்றவர்களுக்கு ஏற்பட்ட
சங்கடங்கள் இவற்றை எல்லாம் சுலபமாக நிவர்த்தி செய்யும் மனவலிமையையும்
உடல்வலிமையையும் தந்தருள்வாயாக...
 
என் சமூகத்திற்கு தூய்மையான சேவைகள் செய்து என் மரணத்திற்குப் பிறகும்
எனக்காக மற்றவர்கள் உன்னிடம் துஆ கேட்கும் அற்புதமான வாழ்வை தந்தருள்வாயாக...
என் மார்கதிற்க்காக என் மக்களின் முன்னேற்றத்திற்க்காக களமாடும் வேளையிலே...
உரிமைகளை வென்றெடுக்கும் மூர்க்கமான பயணபாதையிலே... எனக்கு ஷஹீதை தந்தருள்வாயாக...
 
சமுதாய சொந்தங்களே...
எனக்காகவும் என் மனைவி மக்களுக்காகவும் இறையவனிடம் துஆ செய்யுங்கள்...
நானும் என் மனைவி மக்களும் உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்தினருக்காகவும்
துஆ செய்கிறோம்...
 
உரிமையுடன் உங்கள் துஆக்களை விரும்பும்...
உங்கள் சமுதாய சகோதரன்
வேங்கை.சு.செ.இப்ராஹீம்
 
 
 

திங்கள், 28 மார்ச், 2011

இளையான்குடி டைம் டிரஸ்டின் வட்டியில்லா அழகிய கடன் திட்டம்...


கந்து வட்டி கொடுமையிலிருந்து இளையான்குடி மக்களை, குறிப்பாக பெண்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கில், டிரஸ்டின் நிறுவனர் அல்ஹாஜ் முசாபர் அப்துல் ரஹ்மான் அவர்களின் பெரும் முயற்சியால் கீழக்கரை சீனாதானா அறக்கட்டளையின் உதவியுடன் தொடங்கப்பட்டதே ‘டைம் டிரஸ்டின் அழகிய கடன் திட்டம்’. இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து இதன் பொறுப்பாளர்களாக இருந்து செயல்படும் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் எம்.இ. செய்யது உசேன் மற்றும் இளையான்குடி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜனாப் ஏ.இ. ஜான் முகம்மது அவர்களும் இது பற்றி கூறியதாவது:


கடந்த 2010 ஆண்டு நவம்பர் 27 ம் தேதி டைம் டிரஸ்டால் தொடங்கப்பட்ட அழகிய கடன் திட்டத்தின் மூலம் முதல் முறையாக 28 ஏழை எளியவர்களுக்கு ரூபாய் 5000 (ஐந்து ஆயிரம்) வீதம் கடன் வழங்கப்பட்டது. கடந்த 15.03.2011 அன்று நடந்த விழாவில் கீழக்கரை கொடை வள்ளல் அல்ஹாஜ் சீனாதானா எனும் செய்யது அப்துல் காதர் அவர்கள் கலந்து கொண்டு 12 ஏழை எளியவர்களுக்கு ரூபாய் 5000 வீதம் கடனை வழங்கினார்.


இதுவரை டைம் டிரஸ்டால் மொத்தம் 40 ஏழை எளியவர்களுக்கு அழகிய கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 31 பேர் பெண்கள் மற்றும் 9 பேர் ஆண்கள். பெண்களில் பலர் கந்து வட்டிகாரரிடம் பணம் கடன் வாங்கி தினந்தோறும் வட்டி கட்டி வருபவர்களாக இருந்தார்கள். டைம் டிரஸ்டின் மூலம் அழகிய கடன் பெற்று கந்து வட்டியிலிருந்து மீண்டுள்ளார்கள்.கடன் பெற்றவர்கள் மாதம் ரூபாய் 500 வீதம் 10 மாதங்களில் தங்கள் கடனைத் திரும்ப செலுத்திவிட வெண்டும். அவ்வாறு முறையாக செலுத்தியவர்களுக்கு கூடுதலாக கடன் வழங்கப்படும்.


மேலும், டிரஸ்ட் மூலம் கடன் பெற்றவர்கள் முறையாக தவறாமல் பணத்தைத் திரும்ப செலுத்தி வருகின்றார்கள்;. இந்த முயற்சி நல்ல ஒரு தொடக்கமாகும். இன்ஷா அல்லாஹ் இத்திட்டத்தை முறைப்படுத்தி, சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கொண்டுவரவும், இன்னும் சிறப்பான முறையில் விரிவு படுத்தவும் வேண்டிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். , டைம் டிரஸ்டின் அழகிய கடன் திட்டத்தின் பொறுப்பாளர்களாகிய டாக்டர் செய்யது உசேன் மற்றும் ஜான் முஹம்மது ஆகியோர் கூறினார்.


நன்றி;இளையான்குடி சர்கிள் இணையம்

சனி, 26 மார்ச், 2011

துரோகத்தின் பரிசு தோல்வி...!!!

தமிழகத்தின் சட்டபேரவைக்கான வேட்புமனுதாக்கல்
இன்றுடன் நிறைவு பெற்றுவிட்டது... மாநிலம்முழுவதும்
தேர்தல்களம் சூடுபிடிக்க துவங்கிவிட்டது... பரபரப்பான
பரப்புரைகள்... விறுவிறுப்பான இலவச அறிவிப்புகள்...
என்று மாநிலத்தின் இரண்டு பெரும் கட்சிகளான திமுக அதிமுக
ஆகியவற்றின் தலைமையிலான கூட்டணி கட்சிகள் தமிழகத்தை
தேர்தல்திருவிழா கொண்டாடதினால் திக்குமுக்காடவைக்க துவங்கிவிட்டார்கள்...
 
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஒருநாள் முதல்வர் போல
சில நாட்கள் மட்டும் எஜமானர்களாக அரசியல்வாதிகளால்
ஆராதிக்கப்படும் வாக்காளப்பெருமக்கள் யாருக்கு வாக்களிப்பது
டிவியை போனமுறை தந்துவிட்டு இம்முறை கிரைண்டர் தருவேன் என்பவருக்கா...?
இல்லை கிரைண்டருடன் மிக்சியும் சேர்த்து தருவேன் என்பவருக்கா..?
என்கிற தீராத குழப்பத்தில்...
 
இந்த தருணத்தில் சில விசயங்களை வாழ்வுரிமை மறுக்கப்பட்ட
மூன்றாம்தரமாக வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில்
இருக்கிறோம். சிந்தனை வளம் நம்மில் இல்லாததினால் இழந்தது ஏராளம்...
ஆகவே இனியாவது சிந்திக்க பழகவேண்டியது கட்டாயம்... யாருக்கு வாக்களிப்பது
என்கிற கேள்வியைவிட யாருக்கு வாக்களிக்க கூடாது என்கிற கேள்விதான்
இப்போது நமக்கு தேவை...!
 
எப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் ஏறக்குறைய அணைத்து
(ஒரு சில கட்சிகளை தவிர அவைகள் குறித்து பின்னுரையில் பார்ப்போம்)
அரசியல் கட்சிகளுமே முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாய்ப்புதந்துள்ளது
மகிழ்ச்சிக்குரியது...
 
திமுக முஸ்லிம்களின் தியாகத்தில் வளர்ந்த இயக்கம்... இந்த சட்டப்பேரவை
தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் சகோ.அசன் முகமது ஜின்னா, மதுரை மத்தியில்
சகோ.முகமது கவ்ஸ், பாளையங்கோட்டையில் அமைச்சர் மைதீன்கான், தஞ்சையில் 
அமைச்சர் உபயதுல்லா என நான்கு முஸ்லிம்களை வேட்பாளாராக களமிறக்கி உள்ளது 
இது தவிர தனது கூட்டணியில் உள்ள முஸ்லிம்லீக்கிற்கு தனது சின்னத்திலேயே 
மூன்று தொகுதிகளை கொடுத்துள்ளது... அதிமுக முஸ்லிம்களுக்கு என்றைக்குமே 
நம்பிக்கைக்குரிய தலைமையாக இல்லாதபோதும் இந்த தேர்தல்களத்தில் தன பங்கிற்கு 
ராணிபேட்டையில் சகோ.முகமது ஜான், ஆவடியில் சகோ.அப்துல் ரஹீம், திருச்சியில் 
சகோ.மரியம் பிச்சை ஆகிய மூவரை வேட்பாளராக்கி உள்ளது. அதே கூட்டணியில் 
உள்ள மமகவிற்கு மூன்று தொகுதிகளை தனி சின்னத்தில் போட்டியிடும் தகுதியுடன் 
ஒதுக்கியுள்ளது... 
 
ரணகளதிற்கு பெயர்பெற்ற காங்கிரஸ் கட்சிகூட கிருஷ்ணகிரியிலும் இராமநாதபுரதிலும்
முஸ்லிம்களையே வேட்பாளராக்கி உள்ளது. (முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு போன்ற 
ஜீவாதார கோரிக்கைகளை காங்கிரஸ் எள்ளிநகையாடி வருவதை  கவனிக்க வேண்டும்)
முதன் முறையாக பெரிய கூட்டணி பலத்துடன் தேர்தலை சந்திக்கும் தேமுதிகவும்
திருவாடனை தொகுதியில் சகோ.முஜிபுர்ரஹ்மான் என்கிற முஸ்லிம் வேட்பாளருக்கு
வாய்ப்புகொடுதுள்ளது.
 
பலவிதமான தியாகங்கள் போராட்டங்கள் இவைகளை கடந்து அரசியல் ஆளுமையாக
வளர்ந்துவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது உளுந்தூர்பேட்டை வேட்பாளராக
சகோ.முகமது யூசுப் என்கிற முஸ்லிமைத்தான் நிறுத்தி இருக்கிறது... விசிகவின்
இந்த வளர்ச்சியில் ஆரம்பகாலத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு ஏதுமில்லை. விசிக
வளர்ச்சி பாதையில் வேகமாக பயணிக்க துவங்கிய பிறகே முஸ்லிம்களின் பங்களிப்பு
விசிகவில் ஏற்பட்டது. இருப்பினும் விசிக தனது கொள்கை முழக்கத்திற்கு அடிதளமிட
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற எப்படியும் எட்டு தொகுதிகளில் வெற்றிபெற
வேண்டும் என்கிற கட்டாயம் இருந்தபோதும் எதிர்பார்த்ததைவிட மிக குறைவான தொகுதிகளை
திமுக தலைமையால் ஒதுக்கபட்டிருந்த போதும் இரண்டு பொது தொகுதியை போராடி பெற்று
ஒரு தொகுதியில் முஸ்லிம் வேட்பாளரை களமிறக்கி உள்ளது.
 
ஆனால்...
ஆனால்...
ஆனால்...
தனது சமுதாயத்தின் இளைஞர்களின் உண்ணதமான உயிர் தியாகத்தின் மூலமாக 
அரசியல் பாதையில் அடி எடுத்துவைத்த பாட்டாளி மக்கள் கட்சி... என்னவெல்லாமோ 
போராடிபார்த்தும் "மரம்வெட்டி கட்சி" என்கிற பெயரை மாற்றமுடியாமல் திண்டிவனம் 
தைலாபுரம் தோட்டத்தை தாண்ட முடியாமல் அரசியல் அனாதையாக நின்ற பொது 
கைகொடுத்து மக்களிடம் அங்கீகாரம் பெற்றுதந்தவர்கள் முஸ்லிம்களும் தலித்துகளும் 
என்பதை மறந்துவிட்டு நாங்கள் ஜாதிகட்சிதான் என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளது...
 
வடக்கே வன்னியர்கள்... தெற்க்கே தேவேந்திரர்கள்... இணைப்பு பாலமாய் இஸ்லாமியர்கள்...
இந்த முழக்கம் இன்று மருத்துவர் அய்யாவிற்கு மறந்துபோய்விட்டது... 
சமுதாய தந்தை ஷஹீத் பழனிபாபா அவர்கள் ஒவ்வொரு குக்கிராமங்கள் தோறும் 
முஸ்லிம்கள் மத்தியில் மருத்துவரை அடையாள படுத்தியது மறந்துபோய்விட்டது... 
தனது தொழிலைக்கூட விட்டுவிட்டு முழுநேரமும் பாமகவின் வளர்ச்சி பணிகளிலேயே 
மூழ்கி இருந்த பெரியவர் குணங்குடி ஹணிபா அவர்களின் சேவை இப்போது மருத்துவருக்கு 
மறந்துபோய்விட்டது... எங்கெல்லாம் எதிர்ப்புகள் உள்ளதோ அங்கெல்லாம் ஓடோடி சென்று 
கட்சியை வளர்த்த அண்ணன் கே.எம்.சரீப் அவர்களை மருத்துவருக்கு மறந்துபோய்விட்டது... 
 
எண்பதுகளின் இறுதியில் துவங்கப்பட்ட பாமகவை மக்களிடம் கொண்டு செல்ல 
அன்றைக்கு முஸ்லிம்களும் தலித்துகளும் தேவை பட்டார்கள் சொற்ப வாக்குகள்தான் 
பெறமுடியும் என தெரிந்தும் கட்சியை அறிமுகபடுத்த தேர்தல் களம்தான் சரி என்பதால் 
பெரும் பொருளாதாரத்தை செலவலித்து தேர்தலில் போட்டியிடிடார்கள். ஆனால் பெரிய 
கட்சிகளின் கூட்டணியுடன் போட்டியிட வாய்ப்பு கிடைத்தவுடன் பேருக்கு சில தலித்துகளுக்கு 
வாய்ப்புகள் கொடுத்துவிட்டு அவர்கள்மீது அடக்குமுறையை ஏவி கட்சியைவிட்டே 
வெளியேற செய்தார்கள்... 2001 தேர்தலில் வந்தவாசி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 
தேர்வுசெய்யபட்ட அண்ணன் மதுரை முருகவேல் ராஜன் போன்றவர்கள் இன்று ஏன் 
பாமகவில் இல்லை...? தனது ஆளுமை பலத்தால் பாமகவை தேவேந்திர மக்களிடம் 
கொண்டு சென்ற அண்ணன் ஜான் பாண்டியன் அண்ணன் பசுபதி பாண்டியன் போன்றோர் 
ஏன் பாமகவைவிட்டு வெளியேறினார்கள்...? 
 
ஆனால் இவற்றில் கொடுமை தனித்து களம்கண்ட காலத்தில் முஸ்லிம்களை 
பெருவாரியாக வேட்பாளராக்கிய பாமக கூட்டணி பலத்துடன் களம்கானும் இந்த 
மூன்றாவது தேர்தலிலும் ஒரு முஸ்லிமிற்கு கூட வாய்ப்பளிக்கவில்லை... இது 
இன்றும் அந்த கட்சியில் எந்தவிதமான அதிகார பதவிகளும் பெறாமல் விசுவாசத்துடன் 
செயலாற்றும் முஸ்லிம்களுக்கு மட்டும் பாமக செய்துள்ள துரோகமல்ல... 
 
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...!!! 
ஒரு தலித்தை முதல்வராக்குவோம் இதுவும் மருத்துவர் அய்யாவின் முழக்கம்தான் 
ஆனால் இன்று தேர்தலில் தலித்துகளுக்கு ஒதுக்கிய தொகுதிகள் வெறும் மூன்று... 
 
மருத்துவர் அய்யா அவர்களே... 
உங்கள் துரோகத்திற்கான பரிசை நீங்கள் நிச்சயமாக வரும் மே 13 அன்று பெறுவீர்கள் 
அந்த பரிசு கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் உங்களுக்கு வழங்கிய மகிழ்ச்சியைவிட 
அதிகமான மகிழ்ச்சியை தரும்... 
 
ஆம்... 
துரோகத்திற்கான பரிசை பாமக போட்டியிடும் 30 தொகுதிகளிலும் உள்ள இஸ்லாமிய 
வாக்காள பெருமக்களும் தொப்புள்கொடி உறவுகளான தலித் சமூக மக்களும் பாமகவிற்கு 
வழங்கி பாடம் புகட்ட வேண்டும்... இனிவரும் காலங்களில் நம்மை ஒதுக்கிவிட்டு யாரும் 
அரசியல் செய்ய முடியாது என்பதை நிருபிக்க வேண்டும்... 
 
யாராக இருப்பினும் "துரோகத்தின் பரிசு தோல்வி" என்பதை விளங்க செய்வோம்.... 

செவ்வாய், 15 மார்ச், 2011

தலித்களும் முஸ்லிம்களும் ஒருங்கிணைந்து அரசியல்களம் காணவேண்டியது காலத்தின் கட்டாயம்...


இஸ்லாமியர்களைத் தவிர்த்த தலித் சமூக விடுதலையும், தலித்துக்களைத் தவிர்த்த இஸ்லாமிய சமூக விடுதலையும் சாத்தியமில்லை என்ற கொள்கை முழக்கத்தை அரசியல் லட்சியமாக அறிவித்துள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீதும், திருமாவளவன் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வரும் நிலையில், அக்கட்சியின் பொருளாளரான திரு.முகமது யூசுஃப் அவர்களிடம் எடுக்கப்பட்ட‌ நேர்காணல்.
சந்திப்பு: மால்கம் X இராசகம்பீரத்தான்
கேள்வி: இன்றைய சூழலில் தமிழக அரசியல் கட்சிகளின் தலைமைப் பதவிகளில் ஒரு இஸ்லாமியரும் காணப்படாத நிலையில் விடுதலை சிறுத்தைகள் இஸ்லாமியர்களுக்கு தலைமைப் பதவிகளிலும் பிரதிநிதித்துவத்தை கொடுத்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இஸ்லாமியர்களின் அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்கும் தளமாக இருக்குமா?

முகமது யூசுஃப்: “எரிகின்ற சேரிகளிலிருந்தும், உடைகின்ற மசூதிகளிலிருந்தும் புறப்படுகிறது புரட்சியின் சூறாவளி” என்று முழங்கிய திருமாவளவனின் அரசியல் கருத்தாக்கத்தால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்குள் நுழைந்தவன் நான்.
இந்துத்துவவாதிகளினால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர், விசுவரூபம் எடுத்த இஸ்லாமியர்களின் எழுச்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கு சரியான தலைமைகள் இல்லாமல் போனது. மேலும் சிறுபான்மை இஸ்லாமியர்களின் தலைமைக்குள் ஒற்றுமையில்லாமல் தங்களுக்குள்ளாகவே மோதிக் கொள்ளும் குழு அரசியல் மனப்பான்மை அதிகமானது. அதனால் இஸ்லாமியர்களின் அரசியல் தலைமை வெற்று இடமாகவே இருந்து வந்தது.
சாதியத்தால் ஒடுக்கப்பட்ட தலித் சமூகமும், இந்துத்துவ ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட இஸ்லாமிய சமூகமும் ஒரே மாதிரியான சமூகப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றன. இருவரின் சமூக விடுதலைக்கும் ஒரே மாதிரியான அரசியல் தளம் இன்று அவசியமானாதாகும். மேலும் இந்துமதத்தின் சாதியக் கொடுமைகளிலிருந்து விடுபட்டு சுயமரியாதை காண்பதற்காக இஸ்லாத்தில் இணைந்த இந்திய இஸ்லாமியர்கள் தலித்துகளின் தொப்புள் கொடி உறவாக இருப்பதாலும் தலித்துகளும், இஸ்லாமியர்களும் இயல்பாகவே இணைந்து போராடுவதற்கு சாத்தியமுள்ள சமூகமாக இருக்கின்றனர். அதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி இரு சமூகத்திற்குமான பொதுத் தளமாக இருக்கின்றது. திருமாவளவன் அவர்களிடம் எல்லா தேசிய இனப் பிரச்சனைகளிலும் ஈடுபடும் அரசியல் அணுகுமுறைகளும், தொலைநோக்குப் பார்வையும் இருப்பதால் இன்று அனைத்து தரப்பு மக்களும் விரும்பக்கூடிய தலைவராக இருக்கிறார்.
மற்ற ஏனைய கட்சிகளிலும் மொழி சார்ந்த, இனம் சார்ந்த சிறுபான்மைப் பிரிவுகள் இருந்தாலும் அது உண்மையிலேயே சிறுபான்மை இனத்தவர்களுக்கான உரிமைகளை நிலைநாட்டும் அமைப்புகளாக இல்லை. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இஸ்லாமிய சனநாயகப் பேரவை மிகவும் தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது, இஸ்லாமியர்கள் சிலர் பெயரளவில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தபோதும் அவர்கள் இதுவரை வாய்ப்புகளை சரிவரப் பயன்படுத்தி இஸ்லாமியர்களின் எந்தப் பிரச்சனைகளையும் பேசியது இல்லை.

திருமா அவர்களின் முதல் பாராளுமன்ற முழக்கமே இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டினைப் பற்றிதான், பிறகு காஷ்மீர தேசியப் பிரச்சனையை மிகவும் உறுதியுடன் பேசினார். அதே போல் இஸ்லாமிய சனநாயகப் பேரவையின் சார்பில் வேலூர் மசூதி மீட்புப் போராட்டம் நடத்தியதும், கேரளாவில் மதானி அவர்களின் கைதினைக் கண்டித்து முதன் முதலில் எதிர்ப்பு தெரிவித்ததும் திருமா அவர்களே. பாபர் மசூதி மதவெறியர்களால் இடிக்கப்பட்டபோது அதே இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட வேண்டும் என்று அயோத்தி பயணத்திற்கு துணிந்து அழைப்பு விடுத்ததும், தலித்-இஸ்லாமிய ஒற்றுமை மாநாடுகள் நடத்தி வருவதும், வக்ஃப் நிலங்கள் மீட்புப் போராட்டங்களும் குறிப்பிடத்தக்கவை. டிசம்பர் 6ஐ தலித்- இஸ்லாமியர்கள் எழுச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது. காயிதே மில்லத் அவர்களை நினைவுகூறும் பொருட்டு விழாக்கள் எடுக்கிறோம். மற்ற கட்சித் தலைவர்கள் எல்லாம் இஸ்லாமியர்களின் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் சம்பிரதாயத்திற்காக கலந்து கொள்ளும்போது திருமா அவர்கள் மட்டும் சஹர் செய்து உண்ணாநோன்பிருந்து இஸ்லாமியர்களுடன் உணர்வுடன் நோன்பு திறப்பவராக உள்ளார்.

இஸ்லாமியர்களுக்காக குரல் கொடுக்க சரியான தலைவர்கள் இல்லாத தேக்க நிலையில் இஸ்லாமியர்களுக்காகவும் குரல் கொடுக்கும் திருமா அவர்களின் சமூக தொலைநோக்குப் பார்வையினால் இன்றைய இஸ்லாமிய இளைஞர்கள் பெருமளவில் விடுதலைச் சிறுத்தைகளில் ஈர்க்கபட்டு வருகின்றனர்.

முக்கியமாக தமிழகத்தில் இன்று மதக்கலவரங்கள் இல்லை. இஸ்லாமியர்களுக்கு எதிராக தலித் மக்களை மதக்கலவரத்தில் ஈடுபடுத்தி வந்த இந்துத்துவவாதிகளின் சதிகள் விடுதலை சிறுத்தைகளால் முறியடிக்கப்பட்டது. இதுவே விடுதலை சிறுத்தைகளின் பெரும் சாதனையாக இருக்கிறது.

தலித்துக்களுக்கும் மட்டும் அல்லாமல் இஸ்லாமியர்களுக்கும் மற்றும் ஏனைய சிறுபான்மையினர்களுக்கும் ஒப்பற்ற தலைவராக திருமாவளவன் அவர்கள் இருந்து வருகிறார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

கேள்வி: ஒரு தலித்திய அமைப்பாக தோன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்னும் ஒரு சாதிய அமைப்பாகவே பார்க்கப்படுகிறதா? அதன் சமகால வளர்ச்சியைப் பற்றி உங்களின் கருத்து என்ன?.

முகமது யூசுஃப்: தாழ்த்தப்பட்ட மக்களின் சாதிய விடுதலைக்காக ஏற்படுத்தப்பட்ட இயக்கமாக தோன்றி பிறகு தேர்தல் அதிகாரத்தை வென்றெடுக்க அரசியலில் ஈடுபடுவதாக முடிவெடுத்து அன்று இருந்த மூப்பனாரின் தமாக உடன் இணைந்து தேர்தலை முதன் முறையாக 1999ல் சந்தித்தது. பிறகு வேளச்சேரி தீர்மானத்திற்குப் பிறகு 2007ல் சாதிய அடையாளத்தை முன்னிருத்தாமல் பொது நீரோட்ட அரசியலில் ஈடுபட்டு அதன் மூலம் அரசியல் அங்கீகாரத்தை வென்றெடுப்பதாக முடிவெடுக்கப்பட்டது.
இன்று பொது அரசியல் தளத்தில் தவிர்க்கமுடியாத சக்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாறியுள்ளது.
மேலும் பல இணை கட்டமைப்புகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளடக்கியதாக இருக்கிறது. இசுலாமிய சனநாயக பேரவை, மகளிர் விடுதலை இயக்கம், இளம்சிறுத்தைகள் எழுச்சி பாசறை, தமிழக உழவர் இயக்கம், முற்போக்கு மாணவர் கழகம், அரசு ஊழியர் ஐக்கியப் பேரவை, விடுதலை கலை இலக்கியப்பேரவை, தொழிலாளர் விடுதலை முண்ணனி, பழங்குடியினர் வி.இ, சிறுவர் எழுச்சி மன்றம், மீனவர் மேம்பாட்டு பேராயம் தமிழக கிருத்துவ சமூக நீதிப்பேரவை, நரி குறவர்கள், கொத்தடிமை ஒழிப்பு முன்னணி, சமூக நல்லிண இயக்கம், அரவாணிகள் நலசங்கம், மக்கள் பண்பாட்டு இயக்கம், துரும்பர் விடுதலை இயக்கம் இயக்கம் என பல இயக்கங்களைக் கொண்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் இன்று தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் கட்சியாகவும், ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்குமான கட்சியாக தமிழகத்தில் வளர்ந்து வருகிறது.

கேள்வி: தமிழகத்தில் இஸ்லாமியர்களின் பொதுப் பிரச்சனைகளில் பொதுவுடமைவாதிகளும், பெரியாரியவாதிகளும், மதச்சார்பற்றவாதிகளும் முன்னின்று போராடி வருகின்றனர், ஆனால் இஸ்லாமியர்களோ எந்த ஒரு தேசிய இனப் பிரச்சனைகளிலும் ஈடுபடுவது இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது, அதைப் பற்றி ஒரு இஸ்லாமியராக உங்களின் கருத்து என்ன?

பதில்: இன்றைய இஸ்லாமியத் தலைவர்களில் யாரும் திரு காயிதே மில்லத் அவர்களைப் போலவோ அல்லது ஷஹித் பழனி பாபா அவர்களைப் போன்றோ தனிபட்ட ஆளுமையுடையவர்களாக இல்லை என்பதும் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. இன்றைய இஸ்லாமிய அமைப்புகளில் ஒற்றைத் தலைமையோ, அரசியல் ஆளுமையோ, தொலைநோக்குப் பார்வையோ இல்லை.
பன்மைச் சமூக கூட்டத்தில் வாழ்ந்து கொண்டு மாற்று சகோதரர்களுக்கு வாழ்த்து செய்திகள் சொல்வதில் கூட தயங்கி நிற்கும் சமூகமாகத்தான் இருக்கிறது.
மேலும் இன்று வெகுஜன அரசியல் என்னவென்று தெரியாமலும், இஸ்லாமிய மார்க்கத்தை அரசியலில் கலந்து தங்களுக்குள்ளாகவே தனிமைப்பட்டும் கிடக்கின்றனர். இஸ்லாம் என்பது வாழ்வியல் நெறி மட்டுமே. அதை அரசியலில் கலக்கக் கூடாது. ஆனால் இங்கு மார்க்கத்தை அரசியலாக்கி வருவது வருந்தத்தக்கது.
இஸ்லாமிய அமைப்புகளிடம் மதம் சார்ந்து பார்க்கும் பார்வை மட்டும் தான் இருக்கிறது.
ஈழத்தில் தமிழர்கள் கொடுங்கோலன் ராசபக்சேவினால் கொன்று குவிக்கப்பட்ட போதும் ஒருசிலரைத் தவிர இங்குள்ள பெரும்பாலான இசுலாமியர்கள் அதற்காகப் போராடவில்லை. தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட போதும் அதற்காக இங்குள்ள இஸ்லாமிய அமைப்புகள் போராடவில்லை. அடையாளங்களை மட்டுமே பார்க்கும் சமூகமாகத்தான் இஸ்லாமிய சமூகம் இருக்கிறது, இது மாறவேண்டும்.
வணிக சமூகமாக இருக்கும் இஸ்லாமிய சமூகத்தில் வாழ்வாதாரப் பிரச்சனைகளிலேயே அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அதைத் தாண்டி சமூகப் பிரச்சனைகளிலும் ஈடுபடவேண்டும்.

மேலும் அவர்களின் அரசியல் பிரச்சனைகளைக் கூட அவர்களால் வென்றெடுக்க முடியாத நிலையில் உள்ளனர். நிச்சயமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இஸ்லாமியர்களுக்கு அரசியல் பயிற்சி அளிக்கும் தளமாக இருக்கும் என்று நம்பலாம்.

இசுலாமிய சனநாயகப் பேரவை எல்லா தேசியப் பிரச்சனைகளிலும் மிகவும் முனைப்புடன் போராடிவருகிறது. ஈழப்படுகொலைகளைக் கண்டித்து போராட்டம், மீனவர்கள் படுகொலைகளை எதிர்த்து போராட்டம், காஷ்மீர மக்களுக்கான ஆதரவுப் போராட்டங்கள் என எல்லா முக்கிய தேசியப் பிரச்சனைகளிலும் ஈடுபட்டு வருகின்றது.

கேள்வி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் திருமா என்ற தனி நபர் வழிபாடு அதிகமாக இருப்பதுபோல் தோன்றுகிறது, ஆனால் இஸ்லாமியர்கள் தனிநபர் வழிபாட்டினை முற்றிலுமாக எதிர்ப்பவர்கள். இந்நிலையில் இஸ்லாமியர்கள் விடுதலை சிறுத்தை கட்சியில் எப்படி முழு மனதோடு இணைந்து செயல்படுவார்கள்?

முகமது யூசுஃப்: இஸ்லாமியர்கள் பொது நிகழ்ச்சிகளில் கூட தனி நபர்களைப் புகழ்ந்தோ, வாழ்க என கோசங்கள் போடாமல் ஏக இறைவனுக்கே புகழ் என்ற கண்ணியம் பாராட்டுபவர்கள். இஸ்லாமிய சனநாயகப் பேரவையில் எப்பொழுதும் தனி நபர் வழிபாடு கிடையவே கிடையாது.

இஸ்லாம் தோன்றிய இத்தனை வருடங்களிலும் இஸ்லாமியர்களிடம் உருவ வழிபாடு என்பது ஊடுறுவாமல் இருப்பதற்கும், தனி நபர் வழிபாடுகள் அதீத புகழ்ச்சிகள் போன்றவைகள் இல்லாதற்குக் காரணம் பெருமானார் முகமது நபி அவர்களும், அவர்களின் தோழர்களும் உருவப் படங்களையோ அல்லது ஓவியங்களையோ இல்லாமல் பார்த்துக் கொண்டதும், அதற்கான எந்தத் தடயங்களும் இல்லாமல் மிக நுண்ணிய கவனிப்புடனும் பாதுகாத்து வந்ததேயாகும் என்று வியப்புடன் கூறுபவர் திருமா அவர்கள்.

திருமா அவர்களும் இதையே தன் கட்சியினரும் கடைபிடிக்க வேண்டும் என்று விரும்புகிறார். மேலும் விடுதலைச் சிறுத்தைகளின் கருத்துக்களை தாங்கிப் பிடிக்க வலுவான ஊடகங்கள் கிடையாது. எங்கள் கட்சி பல லட்சம் மக்களைத் திரட்டி ஒரு மாநாடே நடத்தினாலும் ஆதிக்க சக்திகளால் அது இருட்டடிப்பு செய்யப்படுகிறது; இல்லை என்றால் பெட்டி செய்தியில் வருகிறது.

இன்றைய நிலையில் ஒற்றைத் தலைமை என்பது அரசியல் வெற்றிக்கு முக்கியமானதாகும். ஆனால் தனி நபர் வழிபாடு என்பது எங்கள் கட்சியில் இல்லை. இரவு 3 மணிக்குக் கூட பொது மக்களுக்கான சந்திப்புகளை வழங்கி அவர்களுடன் தடையின்றி உரையாடும் ஒரே தலைவர் திருமா அவர்கள் மட்டுமே.

தனக்கென்று வாழ்வதைப் பற்றி ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் தமிழர்களுக்காக தன்னையே அர்பணித்த தலைவர் திருமா அவர்கள். எந்த நிலையிலும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் கொண்ட கொள்கைகளுக்காகப் போராடும் ஒப்பற்ற தலைவராகத் தான் திருமா இருக்கிறார்.

கேள்வி: தமிழகத்தில் இஸ்லாமியர்களும் தலித்துகளும் இணைந்து போராட வேண்டிய சூழலில் உள்ளனர். ஆனால் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலையினை வைக்கவிடாமல் எதிர்த்த சில இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக திருமா அவர்கள் நடந்து கொண்டது, பல நடுநிலையாளர்களை வருத்தமடையச் செய்தது. இஸ்லாமியர்களுக்கும் தலித்துகளுக்கும் போதுமான புரிந்துணர்வுகள் இல்லையா? அம்பேத்கர் அவர்களின் மீது பொதுவுடமைத் தோழர்களுக்கு இருக்கும் மரியாதை கூட திருமா அவர்களுக்கு இல்லை என்று நடுநிலையாளர்கள் வருத்தப்படுகின்றனர்.

முகமது யூசுஃப்: அந்த சம்பவம் இரண்டு இஸ்லாமியர்களுக்கு இடையேயான உள்ளூர் அதிகாரப் போட்டியாகும். அதையே தலித், இஸ்லாமிய விரோத அரசியல் கலவரமாக மாற்றப்பட்டது. இதில் இரண்டு சமூகத்திற்கு விரோதம் வந்துவிடாமல் திருமாவளவன் அவர்கள் சமாதானம் செய்து வைத்ததை அரசியலாக்கி விட்டனர். விடுதலைச் சிறுத்தைகள் மசூதியை விட்டு தள்ளி தனது சொந்த செலவில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு சிலை வைத்து சமூக நல்லிணக்கத்தை விடுதலைச் சிறுத்தைகள் உருவாக்கியுள்ளது.

ஆனால் திருமாவினால் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டு மக்களிடையே கலவரங்கள் வரவேண்டும் என விரும்புகிறவர்கள் தலித் இஸ்லாமிய விரோதம் ஏற்படுத்தி இந்த இரண்டு இன மக்களையும் பிரித்தாள வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகின்றனர். ஆனால் நாங்கள் மிக கவனமாக இருக்கிறோம்.
தலித், இஸ்லாமிய ஒருங்கிணைப்புகளை உறுதி செய்தும் இவ்விரு சமூக மக்களுக்கிடையேயான புரிதல்களையும் தமிழகம் முழுவதும் நாங்கள் ஏற்படுத்தி வருகின்றோம். இந்த உறவுகளுக்குள் எந்த பிளவும் ஏற்படாதவாறு நாங்கள் பார்த்து வருகின்றோம்.

கேள்வி: இஸ்லாமியர்களுடனான சிறுத்தைகளின் அரசியல் உறவுகள் எப்படி இருக்கும்?

முகமது யூசுஃப்: திருமா அவர்கள் இஸ்லாமியர்களின் ஓட்டு ஆதாயத்திற்காக குரல் கொடுப்பவர் அல்ல. அவர் இஸ்லாமியர்களுக்காக தோளோடு தோள் நின்று போராடும் களப் போராளி.
தலைமைக்கான போட்டிகளில் சிக்கித் தவிக்கும் இசுலாமியத் தலைவர்களால் இஸ்லாமிய அமைப்புகள் தமிழகத்தில் ஒருங்கிணைந்து ஒரு பேரியக்கமாக மாறும் என்பது சாத்தியம் இல்லாதது.

தாழ்த்தப்பட்டோரும் முஸ்லிம்களும் ஒருங்கிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம். சார்ந்து இருக்கத் தேவையில்லை; சேர்ந்து இருப்போம் என்பது தான் இஸ்லாமியர்களுடனான விடுதலை சிறுத்தைகளின் நிலைப்பாடு.

கேள்வி: தலித் இஸ்லாமியர்களின் சமூக மேம்பாட்டிற்கு இடையூறாக இருக்கும் மிக முக்கிய காரணங்களாக நீங்கள் கருதுவது எது?

முகமது யூசுஃப்: வலுவான பொருளாதாரமும், நல்ல கல்வியும்தான் இந்த இரண்டு சமூகங்களையும் மேன்மையடையச் செய்யும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.
பல ஆயிரம் கோடி மதிப்புள்ள ஆக்ரமிக்கப்பட்ட வக்ஃப் நிலங்கள் மீட்கப்படுவதன் மூலமாக இஸ்லாமிய சமூகத்தினரின் வாழ்வாதாரங்கள் நிச்சயமாக உயர்வடையும்,
அதே போல் தலித் மக்களுக்கா ஒதுக்கப்பட்ட நிதி ஆதாரங்கள் அம்மக்களுக்கு முழுமையாக வந்து சேர்ந்தாலே அவர்களின் பொருளாதார நிலை மேம்படும்.

கேள்வி: தேர்தல் அரசியல் நிலைப்பாடு எடுப்பதற்கு முன் இருந்த திருமாவின் போராட்டக் குணங்கள் இன்று மங்கி விட்டதாகத் தோன்றுகிறது. போராட்டங்கள் மறைந்து வெறும் கூட்டமாகவும், மாநாடுகளாகவும் தான் இருக்கிறது. அதிகாரத்தை நோக்கிய விடுதலைச் சிறுத்தைகளின் பயணத்தில் திருமா அவர்கள் அதிகமான சமரசத்திற்கு ஆளாகுவது போன்ற நிலை இருக்கிறதே

முகமது யூசுஃப்: இது தவறான செய்தி, திருமா அவர்கள் எந்த நிலையிலும் கொள்கை இழக்காத ஒரு போராளியாகத் தான் இருக்கிறார், யாருடனும் சமரசம் செய்யாமல் தன் மனதில் இருப்பதை உறுதியுடன் சொல்லக் கூடியவர். இன்றளவும் களத்தில் நின்று போராடி வருபவர். அதே நேரத்தில் பிரச்சனைகளை அந்த கணத்திற்கு ஏற்றார் போல் மிகவும் திறமையாக கையாண்டு தீர்வு காணக்கூடியவர். மிகவும் நுட்பமான சிக்கலான பிரச்சனைகளில் பொதுமக்களுக்குள் எந்த குழப்பங்களும், கலகங்களும் வந்துவிட கூடாது என்ற கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்படுபவர்.
தனக்குள்ள அதிகாரத்தைக் கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டும் வருகிறார். ஆனால் எதிரிகளோ கலகங்களும், அமைதியின்மையும் வரவேண்டும் அது திருமாவின் வளர்ச்சியை பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகின்றனர். ஊடகங்களும் திருமாவளவனின் போராட்டங்களையும் அவர் சார்ந்த செய்திகளையும் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்து வருகின்றனர். எந்த ஒரு கொள்கையும் இல்லாத கோட்பாடுகளும் இல்லாத சினிமா நடிகர்களுக்கெல்லாம் ஊடகத்தில் திட்டமிட்டே வரம்பு மீறிய வெளிச்சம் தரப்படுகிறது, கொள்கையுடன் தமிழனத்திற்காகப் போராடுபவ‌ர் இருட்டடிப்புக்கு உள்ளாவது மிகவும் வேதனையான விசயமாகும்..

கேள்வி: ”அத்துமீறு அடங்க மறு, திமிரி எழு திரும்ப அடி “ போன்ற வாசகங்கள் இன்று வன்செயல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் வழிவகுத்துள்ளது. கட்டப்பஞ்சாயத்துக்கள், சொத்து பறிமுதல்கள் என மக்கள் அச்சமடைந்து இருப்பதாக சொல்லப்படுகிறதே.. கட்சியின் தொண்டர்களுக்குத் தேவையான நடைமுறை பண்பாட்டு ஒழுக்கங்களை கற்றுத் தருகிறதா உங்கள் கட்சி?.

முகமது யூசுஃப்: விடுதலைச் சிறுத்தைகளை நோக்கி மட்டும் குற்றம் சாட்டுவது என்பது பொதுப்புத்தியினரின் குற்றச்சாட்டாகவே நான் கருதுவேன்.
எல்லா அரசியல்வாதிகளும் அப்படித்தான் இருக்கிறார்கள் ஆனால் அது ஒரு பெரும் குற்றமாகக் கருதப்படுவது இல்லை. ஆண்டாண்டு காலம் அடிமைப்பட்டுக் கிடந்தவன் மட்டும் குரல் கொடுக்கக் கூடாது? வெள்ளை வேட்டி சட்டை அணியக் கூடாது, அதிகாரம் செய்யக் கூடாது? விடுதலை சிறுத்தைகளின் ஒரு சிலரது நடவடிக்கைகளை மட்டும் கோடிட்டுக் காட்டுவது என்பது முழுக்க முழுக்க ஆதிக்க மன நிலையைத்தான் காட்டுகிறது. ஆனால் எங்கள் கட்சியில் 99 சதவீதம் நடக்கின்ற ஆரோக்கியமான நல்ல நிகழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்ட ஊடகங்கள் இல்லை.
“அத்துமீறு, அடங்க மறு, திமிரி எழு, திருப்பி அடி” போன்ற வாசகங்கள் அடங்கிக் கிடந்த சமூகத்திற்கு தேவையானதாக இருந்தது. ஆனால் இப்பொழுது எங்கள் அமைப்பினர்களை கல்வியாளர்களாக, பண்பாட்டு அரசியல் தெளிவு உடையவர்களாக, நேர்மறை அரசியல் பாதைகளை காட்டி பயிற்சி அளித்து வருகிறோம்.

கேள்வி: எனது தமிழ் இனத்தைக் கொன்றொழித்த காங்கிரசும், அதற்கு துணை போன திமுகவுமே எமது எதிரிகள் அவர்களை எதிர்த்து நாம் தமிழர் இயக்கம் பிரச்சாரம் செய்யும் என்றும், ஆனாலும் தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் விடுதலைச் சிறுத்தைகளையும், பாமகவையும் எதிர்க்கமாட்டோம் என்று எதிரணியில் இருந்தாலும் சீமான் அவர்கள் கூறுகிறார். அதைப் பற்றி உங்களின் கருத்து என்ன?.

முகமது யூசுஃப்: தமிழ்த் தேசியம் வலியுறுத்தும் எல்லா இயக்கங்களுமே சகோதர இயக்கங்கள் தான். காலத்தின் சூழ்நிலையில் வேறு தளங்களில் இருந்தாலும் வெவ்வேறு பாதைகளில் பயணித்தாலும் நோக்கமும் லட்சியமும் ஒன்று தான். செந்தமிழன் சீமான் அவர்களும், எழுச்சித் தமிழன் திருமாவளவன் இருவரும் மாவீரன் பிரபாகரின் அன்புத் தம்பிகள் தானே. அவர்களுக்குள் இயல்பாகவே சகோதரத்துவம் இருக்கத் தானே செய்யும். இருவரும் ஒருவர் மேல் ஒருவர் நட்பும் மரியாதையும் கொண்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு இடையே இருக்கும் மயிரளவு இடைவெளிகளையும் மலையளவு பிளவாக உருவாக்க எதிரிகள் முயன்று வருகின்றனர். தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவு என்பது தமிழன் மரபு. தமிழ் தேசியம் பேசுபவர்களை திருமா அவர்கள் முழுமனதோடு ஆதரித்து வருகிறார். யாரும் யாருக்கும் போட்டியல்ல, தமிழ்த் தேசிய இயக்கங்கள் மிகவும் பலமாக எங்கள் பொது எதிரிகளை எதிர்த்து வருகிறோம்.
நன்றி:கீற்று வலைத்தளம்

புதன், 9 மார்ச், 2011

மரண அறிவிப்பு


 
 
ஆதாரம்: திர்மிதீ, ரியாளுஸ்ஸாலின்: 514
--
ஒருவர் வபாத்தாகி (மரணம்) விட்டதாக வைத்துக் கொள்ளுங்கள். அவரது ஜனாஸா பற்றி புகழ்ந்தே பேசுங்கள். இறந்தவர் நல்லவரோ இல்லையோ அவர் வாழ்ந்த காலத்தில் செய்த நன்மைகளைப் பற்றி மட்டுமே பேசுங்கள். எவ்வளவு கெட்டவராக இருந்தாலும், அவர் தன் வாழ்வில் நான்கு நன்மையாவது செய்திருப்பார். அதைப் பற்றி மட்டும் பேசுங்கள...். ஒருவேளை அவர் செய்த நன்மைகள் எதுவும் உங்களுக்குத் தெரியாமல்,  தீமைகள் மட்டுமே தெரிந்திருந்தால் அதுபற்றி நீங்கள் பேசவே வேண்டாம். ஏன் தெரியுமா? நபிகள் நாயகத்தின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைக் கேளுங்கள்.
ஒருமுறை நபிகள் நாயகத்தின் தோழர்கள் சிலர் இறந்து போன ஒருவர் வீட்டில் அமர்ந்து அவரைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்நேரத்தில் அங்கு வந்த நாயகம், அவருக்கு சுவனம் (சொர்க்கம்) கட்டாயமாகி விட்டது. நீங்கள் யாரை சொர்க்கத்திற்கு தகுதியானவர் எனக் கூறுகிறீர்களோ, அவரை அல்லாஹ் சொர்க்கத்திற்கு அனுப்பி விடுகிறான். யாரை நரகத்திற்கு தகுதியானவர் எனக் கூறுகிறீர்களோ, அவரை நரகத்திற்கு அனுப்பி விடுவான், என்றார். வாழ்ந்த போது கெட்டவராக வாழ்ந்த ஒருவர், இறப்பிற்கு பின்னாவது நற்கதி பெறட்டுமே என்ற எண்ணம் நமக்கு வர வேண்டும் என்ற அர்த்தத்திலேயே நாயகம் அப்படி சொன்னார். இறந்தவர் நமக்கு வேண்டியவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் இறப்பிற்கு பிறகாவது அவர் சொர்க்கம்செல்லட்டும் என்ற உணர்வு நமக்கு வர வேண்டும்

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்(03:185)


எந்த ஆன்மாவும் (முன்னரே) ...எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க, அல்லாஹ்வின் அனுமதியின்றி, மரணிப்பதில்லை.(03:145)


நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே.(04:178)


உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது(56:60)
32:11.


"உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், "மலக்குல் மவ்து" தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் - பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்" என்று (நபியே!) நீர் கூறும்.(32:11)


உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் - அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை(06:61)





தன்மானம் காக்குமா தாய்ச்சபை...?

அரசியல் களத்தில் முஸ்லிம்கள் இன்னும் எடுப்பார் கைபிள்ளைகள்தான்
என்பதை மீண்டுமொருமுறை நிருபித்துள்ளது தமிழகத்தின் தற்போதைய
சட்டப்பேரவை தேர்தல்களம்.
 
திமுக கூட்டணியில் அங்கம்வகிக்கும் முஸ்லிம்களின் தாய்ச்சபை எனும்
பெருமைக்குரிய இந்திய யூனியன் முஸ்லிம்லீக் அக்கூட்டணியில் தனக்கு
ஒதுக்கப்பட்ட மூன்று தொகுதிகளிலும் திமுக சின்னமான உதயசூரியன்
சின்னத்திலேயே போட்டியிடுமென அறிவிக்கப்பட்டது.
 
மீண்டும் மீண்டும் தாய்ச்சபை தனது தனித்துவத்தை இழந்துவருவதை கண்டு
அரசியல் சார்பற்ற சமுதாய சொந்தங்களுமே சோகத்திலும் கோபத்திலும்
இருந்துவரும் வேளையில் மேலும் ஒரு இனிப்பான செய்தி வெளியாகி உள்ளது.
ஆம் "அல்வா" இனிப்பாகதானே இருக்கும்...
 
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட தொகுதி உடன்பாடு பிணக்கை
சரிசெய்ய முஸ்லிம்லீக் தனக்கு ஒதுக்கப்பட்ட மூன்றில் ஒரு தொகுதியை தாறைவார்த்துவிட்டதாம்...
கூட்டணிதர்மம் பார்ப்பது அரசியலில் நல்ல விசயம்தான் ஆனால்
"ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் மடத்து ஆண்டி" எனும் கிராமப்புற பழமொழிக்கு ஏற்ப
ஏற்கனவே மூன்று என நாமம் போடப்பட்ட முஸ்லிம்லீக்கின் தலையில்தான்
பெரியவர் கலைஞர் கைவைக்க வேண்டுமா...? 
 
இதில் என்ன கொடுமை என்றால் முஸ்லிம்லீக்கிற்கு ஒதுக்கப்பட்ட மூன்றிலும் 
வெற்றி பெற்றாலும் அவைகள் சட்டப்படி திமுகவின் வெற்றி தொகுதியாகவே 
கணக்கிடப்படும். காரணம் முஸ்லிம்லீக் போட்டியிடுவது திமுக சின்னம். 
அப்படி இருக்கையில் ஏன் அதிலும் ஒன்றை பிடுங்கி காங்கிரசுக்கு கொடுக்க வேண்டும். 
 
கடந்த கால சில சம்பவங்களை பார்ப்போம். மறைந்த அப்துல் சமது சாஹிப் அவர்கள் இருந்தவரை 
திமுகவிற்கும் முஸ்லிம்லீக்கிர்க்கும் ஏழாம் பொருத்தமாகவே  இருந்துவந்தது.
அந்த காலகட்டத்தில் கருத்து வேறுபாட்டால் தேசியலீக்கின் தலைமை பொறுப்பை ஏற்ற
மறைந்த அப்துல்லத்தீப் சாஹிப் அவர்கள் திமுகவுடன் இணக்கமானார். அந்த சூழலில்
நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் திமுக தேசியலீக்கிற்கு ஐந்து தொகுதிகள் 
ஒதுக்கும் அதேபோல அதிமுக முஸ்லிம்லீக்கிற்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கும் ஏறக்குறைய
அந்த ஐந்து தொகுதிகளிலும் முஸ்லிம்லீக்கும் தேசியலீக்கும் நேரடியாகவே மோதிக்கொள்ளும்
அந்த காட்சியை திமுக தலைமையும் அதிமுக தலைமையும் கண்டு ரசிக்கும்.
 
இவற்றை ஏன் சுட்டிக்காட்டுகிறோம் என்றால் எவ்வளவு வரலாற்று பின்பலம்கொண்ட
கட்சி இன்றைக்கு அரசியலில் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து பார்க்கவேண்டும்.
 
கண்ணியதலைவர் காயிதேமில்லத் அவர்களின் கட்டமைப்பில் பல பெரிய அரசியல்கட்சிகளுக்கு
சவால்விடுக்கும் வண்ணம் தோன்றிய முஸ்லிம்லீக் ஏன் இன்று இத்தகைய பின்னடைவுக்கு
ஆளாகியது...?
 
எந்த ஒரு சூழ்நிலைகளிலும் முஸ்லிம்களின் அரசியல் மரியாதையை விட்டுகொடுக்காத
கண்ணியதலைவர் காயிதேமில்லத் அவர்களின் வழிதோன்றல்கள் என சொல்லிகொள்ளும்
முஸ்லிம்லீக்கர்கள் ஏன் இந்த அவல நிலைக்கு ஆளானார்கள்...? அரசியலின் சமயோசிதை
தீர்க்கமான திட்டமிடல் இவைகளை அவர்கள் இழந்தார்கள்... கண்ணியத்தையும் மரியாதையையும்
துறந்தார்கள்...
 
1971 தமிழக சட்டமற்ற தேர்தல்களம் கண்ணியதலைவர் காயிதேமில்லத் அவர்கள் இறுதியாக
பங்கேற்ற தேர்தல்களம். இதே திமுக கூட்டணியில் முஸ்லிம்லீக் அன்றைக்கு ஏழு தொகுதிகளை
பெற்றிருந்தது. திமுக தலைமை முஸ்லிம்லீக்கை தனது சின்னமான உதயசூரியனில் போட்டியிட
வலியுறுத்தியது. காயிதேமில்லத் திடமாக மறுத்தார். அத்தேர்தலில் புவனகிரி தொகுதி வேட்பாளராக
அறிவிக்கப்பட்டிருந்த ஜனாப்.அபுஸாலிஹ் அவர்கள் கண்ணியதலைவர் காயிதேமில்லத் அவர்களிடம்
திமுக சொல்வதை கேட்டு நாம் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடலாமே என சொன்னார்.
அதை கேட்டு சினம்கொண்டாலும் அமைதியாக கண்ணியதலைவர் சொன்னார் அப்படி திமுகவின்
சின்னத்தில் போட்டியிடுவதைவிட முஸ்லிம்லீக்கை கலைத்துவிட்டு திமுகவிலேயே இணைந்துவிடலாம்
என...
 
அத்தகைய கொள்கை உறுதிகொண்ட தலைவன் கண்ட மாபெரும் இயக்கம் ஏன் இன்று அரசியலில்
தல்லாடும்நிலைக்கு தள்ளப்பட்டது...?
 
இன்று அல்ல என்று முஸ்லிம்களின் தாய்ச்சபை தனது  சொந்த அடையாளமான ஏணி சின்னத்தை
துறந்து இரவல் சின்னங்களில் போட்டியிட துவங்கியதோ அன்றே தனது தனித்துவத்தை இழந்துவிட்டது...
ஏறக்குறைய திமுகவின் சிறுபான்மை பிரிவாகவே தன்னை மாற்றிகொண்ட முஸ்லிம்லீக்கை
சாமானிய முஸ்லிம்கள் தங்களின் அரசியல் அடையாளமாகவே இன்றுவரை நினைதுவருகிறார்கள்
என்பது நிதர்சனம். அதை மெய்பிக்கும்வகையில் சில மாறுதல்கள் முஸ்லிம்லீக்கின் தலைமைத்துவத்தில்
கொண்டுவரப்பட்டபோது சமுதாயமே சந்தோசமடைந்தது. ஆனால் அந்த சந்தோசம் மீண்டும்
சள்ளடையாக்கபட்டுவிட்டது.
 
முஸ்லிம்லீக்கின் தலைமை நிர்வாகிகளை சமுதாயம் கேட்க நினைப்பது இதுதான்...
எது நடந்தாலும் சமுதாயமே ஓன்று திரண்டு எதிர்த்தாலும் பெரியவர் கலைஞரை விட்டுகொடுக்காமல் 
பயணிதீர்களே... அதற்க்கான விலைதான் இந்த அவமானமா...? இரவல் சின்னத்தில் நின்று வென்று 
சட்டசபைக்குள் சென்றாலும் திமுகவின் கண்ணசைவுக்குதானே கட்டுப்பட்டாக வேண்டும்...  
இப்போதும் அதேபோல உங்களிடம் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் கடந்த
ஐந்தாண்டு காலமாக அவர்கள் சமுதாய பிரச்சனைகள் குறித்து சட்டமன்றத்தில் என்ன விவாதித்து
இருக்கிறார்கள்...?!!! ஒரு வேலை அவர்களோ உங்கள் தலைமையோ நினைத்தாலும்
சகோ.அப்துல் பாசித் அவர்களாலும் சகோ.கலீலுர்ரஹ்மான் அவர்களாலும் தன்னிச்சையாக
எதாவது செயல்பட முடியுமா...?
 
ஆக சமுதாயத்திற்கு எந்த நன்மையையுமே தராத இந்த பதவிக்களுக்காக ஏன் தன்மானத்தை இழக்க வேண்டும்.?
நேற்று வரை எந்த வகையிலுமே திமுகவிற்கு ஆதரவு அளிக்காத கொமுகவிற்க்கு
கலைஞர் ஏழு தொகுதிகளை அதுவும் சொந்த சின்னத்தில் கொடுத்துள்ளாரே... இது உங்களுக்கு 
உறுத்தலாக இல்லையா...? இப்போது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான காரணத்தை சொல்லி 
திமுக சின்னத்திலேயே உங்களுக்கு ஒதுக்கப்பட்ட மூன்றில் ஒன்றை பிடுங்கிகொண்டாரே 
இது அரசியல் அவமானமில்லையா...? 
 
சமுதாய மக்களின் நன்மதிப்பை மீண்டும் தாய்ச்சபை பெறவேண்டியே அல்லாஹ் இந்த தருணத்தை 
முஸ்லிம்லீக்கிற்கு தந்துள்ளான்... 
 
ஆம் திமுகவின் அவமானத்திற்கு பதிலடிகொடுக்க உங்களுக்கு துணிவு இருக்குமேயானால் 
திமுக அவமானத்தின் அங்கீகாரமாக கொடுத்துள்ள இரண்டு தொகுதிகளையும் தூக்கி எறியுங்கள்...
சமுதாயம் உங்களுக்கான சிவப்புகம்பளத்தை தயாராகவே வைத்துள்ளது... இல்லை... இல்லை...
இதுவே நாங்கள் பெற்ற பாக்கியம் என்பீர்களானால் அதற்கும் பதிலை சமுதாயம் இந்த தேர்தல்களத்தில்
உங்களுக்கு சொல்லும்...!!!
 

முஸ்லிம்களின் அரசியல் புரட்சி...



தமிழகத்தை பொறுத்தவரை இஸ்லாம் சமுதாயத்திற்கு அரசியல் எட்டாக்கனியாகவே இருந்துவருகிறது. காலம் காலமாய் நமது முன்னோர்கள் தமிழகத்திலே இருக்கக்கூடிய திராவிடகட்சிகளுக்கு அடிபணிந்தே இருந்துவருகிறார்கள்.இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு அரசியல் அறிவு இல்லாமல் இருப்பதுதிராவிட கட்சிகளுக்கும் தன்னை தேசிய கட்சி என்று பிரகடன படுத்திக்கொண்டுஇருக்கும் சில கட்சிகளுக்கும் மிகப்பெரிய லாபமாகவே உள்ளது .தமிழகத்தைபொறுத்தவரை நம் சமுதாயம் யாரை அடையாளம் காட்டுகிறதோ அவர்கள்தான் ஆட்சிபொறுப்பில் வரமுடியும் என்பதை நமது சமுதாய மக்கள் புரியாமல் இருப்பது தான்ஏன் என்று தெரிய வில்லை? அரசியலை பார்த்து நமது சமுதாய மக்கள் பயந்துவருவதும் நமது சமுதாய மக்களை பயமுறுத்துவதுமே நாம் அரசியலுக்கு அடிஎடுத்து வைக்க தயங்குவதில் ஒரு காரணம் என நான் நினைக்கிறேன் ..அதே நேரத்தில் அரசியலில் நாங்களும்இருக்கிறோம் என்று சிறிய சிறிய குழுக்களாக குருவி கூடுகளை போன்று நமதுநாட்டில் நமது சமுதாயமும் அரசியலை ஒரு வியாபாரமாக சிலர் செய்து வரும்காட்சியையும் நாம் பார்க்க முடிகிறது.நமக்கு ஏற்ற பிரதிநிதித்துவத்தை தரமறுக்கும் அரசியல் கட்சிகளை இனியும் நம்பினால்நமது சமுதாயத்திற்கு பின்னடைவே தவிர. நமக்கு வளர்ச்சி என்பதுகிடையாது. இவர்களிடம்இருந்து நம்மையும் நம் சமுதாயத்தையும் இறைவனால் மட்டுமேகாப்பாற்ற முடியும் .அதனால் தான் நம்மாலும் அரசியல் செய்ய முடியம் என்பதைஉணர்த்த தூங்கிக்கொண்டிருக்கும் நமது சமுதாய சகோதரர்களை தட்டி எழுப்பவே நாம்இனி முனைப்போடு தேர்தல் களம் காண வேண்டும். அதற்கு முதல் படியாய் நான்அரசியல் அடி எடுத்து வைக்கிறேன். ஜனநாயக இந்தியா வை பண நாயகமாக மாற்றியஅரசியல் வாதிகளுக்கு இடையில் நாம் போராட நினைப்பது சிரமம் என்றாலும் அதைநாம் கண்டிப்பாக போராடி தான் நமது உரிமையை பெற வேண்டிய காலகட்டத்தில்இருந்து வருகிறோம் எத்தனையோ தொகுதிகளை நாம் நிர்ணயம் பண்ண முடிந்தும் நாம்அரசியலை கண்டு ஒளிந்து கொண்டு இருப்பது இனியும் நாம் செய்யும் தவறாகஇருக்ககூடாது.அரசியலில் இருக்கும் பண முதலைகளையும், ஊழலையும் ஒழிக்கவேண்டுமானால்
நாம் வீரமும் துடிப்பும் நல்ல சிந்தனையும் உள்ள இளைஞர்களை களம் இறக்குவதில்முனைப்பு காட்ட வேண்டும் .பண நாயகநாடு இல்லை இது ஜனநாயக நாடு தான் என்றுசொல்லும் அளவிற்கு நாம் நமது மக்களை மாற்றவேண்டும் .இஸ்லாமியர்களும்தலித்துகளும் ஒன்றே சேர்ந்து அரசியலில் பலத்தை காட்டினால் மேல் தட்டு மக்கள் நமது அரசியல் எழுச்சியை கண்டு அதிரும் நிலையை நாம் இன்ஷா அல்லாஹ்இந்த நாட்டிலே உருவாக்க முடியும் .நாம் அனைவரும் சகோதர பாசத்தோடுதலித்துகளையும் மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களையும் ஒன்று சேர்த்துஅரசியல் பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க வேண்டும் இன்ஷா அல்லா .நாம் வாழும்இந்திய திருநாட்டிலே மதவெறி சக்தியை ஒடுக்க வேண்டும் .அதற்கு அனைத்துஒடுக்கப்பட்ட மக்களும் ஒன்று சேர்ந்து களம் கண்டால் தான் அதனை நாம்வென்றெடுக்க முடியும்.சிறுபான்மை மக்களுக்கும் அரசியல் பண்ண தெரியும் என்பதை நாம் இந்த தேர்தல் களத்திலே வீரியமாக காட்ட வேண்டும் .இன்ஷா அல்லாஹ் அதன் முதல் படியாக நான் பாபநாசம் சட்டமன்ற தொகுதியை அடையாளம்கண்டு மக்களின் ஆதரவோடு இறைவனின் துணையோடு மக்களுக்காக உழைக்க நம் சமுதாயமும்தலித் மக்களும்மற்றும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் முன்னேற்ற பாதையில் செல்ல ஒரு முறை தாங்கள் என்னை ஆதரிக்கவேண்டுமென அனைத்து தரப்பு மக்களையும் கேட்டுக்கொள்வதோடு என்னை போல் இன்னும்நிறைய சகோதரர்களை நாம் அரசியலுக்கு வரச்செய்யவேண்டும் என வேண்டுகோள்விடுக்கிறேன்.
முஹம்மது கனி

செவ்வாய், 1 மார்ச், 2011

வெற்றிப்பாதையில்...விடுதலை சிறுத்தைகள்...


தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள
நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கூட்டணிகளை
ஏறக்குறைய உறுதிசெய்துவிட்டன. ஆளும் திமுக தரப்பிலும் அதிமுக
தரப்பிலும் பல கூட்டனிகட்சிகளுடன் தொகுதி பங்கீடே முடிந்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு
பத்து சட்டமன்ற தொகுதிகளை பெற்று தேர்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கூட்டணியை உறுதி செய்துவிட்ட நிலையில் விசிகவின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் ஆதரவும் எதிர்ப்பும் வந்துகொண்டிருக்கிறது.வெறும் பத்து தொகுதிகளை கொடுத்து திமுக திருமாவை ஏமாற்றிவிட்டதாக அக்கட்சியின் மீதும் திருமா அவர்கள் மீதும் அபிமானம் கொண்ட அணைத்து தரப்பினரும் விவாதித்து வருகிறார்கள்...

மேலோட்டமாக பார்பவர்களுக்கு திருமாவை திமுக ஏமாற்றிவிட்டதாகவே தோணும்...ஆனால் சில விசயங்களை மீளாய்வு செய்து சில கடந்த கால சம்பவங்களை உள்வாங்கி நிதர்சனமாக பார்த்தல் பத்து தொகுதிகளை ஒப்புக்கொண்ட தோழர்.திருமாவின் சாதுரியம் விளங்கும்.

ஆரம்ப காலத்தில் தலித் பாந்தர் இயக்கமாக அதன் பின்னர் விடுதலை சிறுத்தைகளாக அரசியலையே புறக்கணித்து வந்த திருமா இன்று தமிழகத்தில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக பரிணமித்திருக்கிறார் என்பதே உண்மை... விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அரசியல் களத்திற்கு வந்த காலம் முதல் படிபடியாக வளர்ந்தே வருகிறர்கள் இந்த சட்டமன்ற தேர்தலிலும் அவர்களின் கைகள் ஓங்கியே நிற்கிறது.

தீர்க்கமான களபனியும் மூர்க்கமான கொள்கைபிடிப்பும் எதார்த்தமான தூரநோக்கு பார்வையும் கொண்ட தோழர்.தொல்.திருமாவளவன் தன்னை உருவாக்கிய தலித் சமூக மக்களை சரியான இலக்கை நோக்கியே நகர்த்தி வருகிறார். அடக்கி ஆளப்பட்ட சமூகத்தை ஆளக்கூடிய சமூகமாக மற்றும் முயற்சிகளில் தொடர்ந்து முன்னேறி வருகிறார்.

2001 சட்டமன்ற தேர்தலில் ஆறு இடங்களில் போட்டியிட்ட சிறுத்தைகள் 2006 சட்டமன்ற தேர்தலில் ஒன்பது இடங்களில் போட்டியிட்டது. இப்போது 2011 சட்டமன்ற தேர்தலில் பத்து இடங்களில் போட்டியிட உள்ளது. இந்த நிலையை வளர்ச்சி என சொல்லாமல் வேறு என்னவென்பது.

ஆதிக்க சாதிகளின் ஆளுமையில் இருந்த தமிழக அரசியல் களத்தை சிறுத்தைகள் மாற்றி வருகிறார்கள் என்பதற்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளை சொந்த சின்னத்தில் போட்டியிட்டு சிதம்பரத்தில் வெற்றியையும் விழுப்புரத்தில் சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பையும் இழந்தது மகத்தான அத்தாட்சி...

சாதி என்கிற குறுகிய வட்டத்துக்குள் கட்சியை அடைத்துவிடாமல் வெகுஜன மக்களின் அங்கீகாரத்தையும் கருத்தில்கொண்டு இன்று சிறுத்தைகள் இஸ்லாமிய மக்களையும் சில பிற்படுத்தப்பட்ட சமூக மக்களையும் தங்களின் பயணத்தில் இணைத்துகொண்டு வெற்றிகரமாக பயணிக்கிறார்கள். இஸ்லாமிய மக்களின் ஜீவாதார உரிமையான இட ஒதுக்கீடு கோரிக்கைகளை வலியுறுத்தி பலவிதமான செயல்பாடுகளை நிகழ்த்திவரும் சிறுத்தைகளை முஸ்லிம்கள் கவனிக்க தவறவில்லை என்பதற்கு சிறுத்தைகளின் உட் பிரிவான இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் கிளைகள் வெகுவாக வளர்ந்துவருவதே சாட்சி...

பாபர் மசூதி வழக்கில் வழங்கப்பட்ட அநீதி தீர்ப்பை கண்டித்து சென்னையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய நீதிமன்ற முற்றுகை போராட்டத்தில் முதல் நபராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றிய தோழர்.திருமாவை முஸ்லிம்கள் இன்று நட்போடும் நம்பிக்கையோடும் பார்க்க துவங்கியுள்ளார்கள் என்பது மிகையல்ல... அதேபோல சென்னை மக்கா பள்ளியில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகஏற்றுக்கொண்ட பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களுக்கு வழங்கப்பட்ட வரவேற்ப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எந்த அரசியல் மாச்சரியங்களுக்கும் அஞ்சாமல் துணிவுடன் தனது கருத்துகளை எடுத்துரைத்த தோழர்.திருமா அவர்களை இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் மரியாதையுடனே நட்பு பாராட்டி வருகிறார்கள்.

2011 ஆம் ஆண்டை விடுதலை சிறுத்தைகள் ஆண்டென பிரகடனம் படுத்தியுள்ள திருமாஎதிர்வரும் 2016 ஆம் ஆண்டை தலித்கள் முஸ்லிம்கள் ஒருங்கிணைந்த அரசியல் எழுசியாண்டாக பிரகடன படுத்தியுள்ளார். ஆதிக்க சக்திகளால் அடிமைபடுதப்பட்ட தலித் மக்கள் "தாழ்த்தப்பட்டவர்கள்"ஆதிக்க வர்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சி முஸ்லிகள் தங்களை தாங்களே "தாழ்த்திகொண்டவர்கள்"

தாழ்த்தப்பட்டவர்களும் தாழ்த்திகொண்டவர்களும் கைகோர்த்து களமாடினால் நாளை தமிழகத்தின் வரலாறை நமது வருங்காலமே தீர்மானிக்கும்.

இந்த சட்டமன்ற தேர்தல் களம் சிறுத்தைகளின் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெரும் யுத்தகளம்... அதே வேளையில் தோழர்.திருமா முன்னெடுத்து செல்லும் முஸ்லிம்கள் தலித்துக்கள் ஒருங்கிணைந்த அரசியலுக்கான அடித்தளம்...
வியூகம் அமைப்பதில் விவேகமான தோழர்.திருமா அவர்களின் சிறுத்தைகள் கவனமுடன் களமாடினால் நிச்சயமாக பத்துக்கு பத்தும் வெற்றிதான் என்பதில் சந்தேகமில்லை...

வேங்கை.சு.செ.இப்ராஹீம்