Subscribe:

புதன், 27 ஏப்ரல், 2011

பயணம் திரைப்படம்... இது விமர்சனம் அல்ல மீளாய்வு...




பயணம் திரைப்படம் போதிக்கும் நீதி, பின்வருமாறு.
இஸ்லாமியர்கள் எனப்படுபவர்கள்:-
1) தீவிரவாதிகள்.
2) குறுரமானவர்கள்


3) வன்முறையில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர்கள்.

4) பாகிஸ்தானைத் தங்கள் தாய்நாடாகக் கருதுபவர்கள்.
5) இந்தியா தங்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்று நம்புபவர்கள்.
6) கடத்தல்காரர்கள், கொலைக்கு அஞ்சாதவர்கள்.
7) இஸ்லாமியர்களுக்கே எதிரானவர்கள்.
8) புனித நூலில் அல்ல, புனிதப் போர்களில் நம்பிக்கை கொண்டவர்கள்.
9) இந்தியாவை அழிக்க, சதாசர்வகாலமும் திட்டமிட்டு வருபவர்கள்.

சரி, இவர்களை என்ன செய்யலாம்? அதற்கும் படத்தில் சுலபத் தீர்வுகள் உள்ளன.

1) இவர்களிடம் இரக்கம் காட்டிப் பயனில்லை.
2) தீவிரவாதி என்று தெரியவந்தால் போதும், சுட்டுவிடலாம்.
3) கமாண்டோ படைகளுக்கு கூடுதல் அதிகாரம் தரவேண்டும்.
4) தேசத்தைத் துண்டாடும், ஊறு விளைவிக்கும் சக்திகளை உடனடியாக அகற்றவேண்டும். இது அரசாங்கத்தின் கடமை.
5) பத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவேண்டும். அரசையும் தேச ஒற்றுமையையும் பலவீனப்படுத்தும் செய்திகளை இவர்கள் வெளியிடக்கூடாது. ('அரசாங்கத்துக்காக இல்லாவிட்டாலும், நம் நாட்டுக்காக' என்கிறார் கமாண்டோ நாகார்ஜுனா).
சென்னையில் இருந்து புது தில்லி செல்லும் ஒரு விமானத்தைத் தீவிரவாதிகள் (என்றால், இஸ்லாமியர்கள்) கடத்துகிறார்கள். தலைவர் யூசுஃப் கானை விடுதலை செய் என்பது அவர்கள் முதல் கோரிக்கை. நூறு கோடி ரூபாய் பணம் என்பது இரண்டாவது கோரிக்கை. பிறகு, எங்களுக்குப் பணம் வேண்டாம் அது ஹராம் என்று மறுத்துவிட்டு, தங்கள் தலைவரை மட்டும் கோருகிறது கடத்தல் கும்பல். பணம் ஹராம். ஆனால், கொலை, சாதாரணமாம்.
சிக்கிக்கொண்டிருக்கும் பயணிகளை மீட்டு, கடத்தல்காரர்களை எப்படி இந்திய கமாண்டோ முறியடிக்கிறது என்பது மிச்சக் கதை. உள்துறைச் செயலராக பிரகாஷ் ராஜ். கமாண்டோவாக நாகார்ஜுனா. தேசப்புற்று, ச்சே தேசப்பற்று நோயால் நாடி, நரம்புகள் வீங்கி, துடித்து, ஆர்ப்பரித்து எழும் மெய்யான இந்திய வீரர். அதி பயங்கர அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடும் தீவிரவாதியான யூசுஃப் கானின் குழுவினரை லடாக்கில் என்கவுண்டர் பண்ணிவிட்டு, யூசுஃபை மட்டும் கைது செய்து செய்த மாவீரர் இவர். இத்தனை கஷ்டப்பட்டு சிறை பிடித்தவரை சும்மா விட்டுவிடமுடியுமா? எனவே, நாகார்ஜுனா கடத்தல்காரர்களை அழித்து, பயணிகளை மீட்கிறார்.

இந்தப் படத்தில் ஓர் அக்கிரகார அம்மாஞ்சி வருகிறார். அவருடைய குணாம்சங்கள் கீழ்வருமாறு.
1) வைதீகப் பற்று மிக்கவன்.
2) பழி, பாவம் அறியாதவன்.
3) பாதகச் செயல்களைக் கேள்வியுற்றாலே நடுநடுங்கும் அளவுக்கு நேர்மையானவன்.
4) அசடு.
5) அப்பாவி.

படத்தில் ஒரு பாதிரியாரும் இடம்பெறுகிறார்.
1) இறை ஊழியத்துக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர்.
2) ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தைக் காட்டக்கூடியவர்.
3) மற்றவர்களுக்காக உயிர் தியாகம் செய்ய முன்வருபவர்.
4) தன் எதிரிகளுக்கும் கருணையைப் பரிசாகத் தருபவர்.

முற்போக்காளர் என்று அறியப்படுபவர் ஒருவரும் இப்படத்தில் வருகிறார். அவர் இயல்புகள்.

1) காந்தி, கார்ல் மார்க்ஸ் இருவரையும் வாசித்தவர். இருவராலும் (அதெப்படி?) ஈர்க்கப்பட்டவர்.
2) பொலிவியா குறித்தும் நாத்திகம் குறித்தும் சில வரிகள் பேசுகிறார்.
3) 'ஹைதரபாத் போய் பார், அங்கே முஸ்லிம்கள் எவ்வளவு அழகாக வாழ்கிறார்கள். நீங்கள் மட்டும் ஏன் இப்படி?' என்று கடத்தல்காரரிடம் கேள்வி கேட்கிறார்.
4) குண்டடிப்பட்டுச் சாகிறார்.
காலம் காலமாக தமிழ் சினிமா சென்றுகொண்டிருக்கும் அதே பாதையில் மற்றுமொரு அப்பட்டமான Stereotype பயணம். ஓர் இஸ்லாமியரை அப்பாவியாகவும், ஒரு பிராமணரை தீவிரவாதியாகவும், ஒரு முற்போக்காளரை நிஜமான முற்போக்காளராகவும் எப்போது தமிழ் சினிமா காட்டப்போகிறது?

படம் எடுக்கப்பட்ட விதம் ஹாலிவுட்டை நினைவுபடுத்துகிறதோ இல்லையோ, படத்தின் கதையமைப்பில் அப்பட்ட ஹாலிவுட் பாதிப்பு. வார்னர் பிரதர்ஸ் இப்படத்தை எடுத்திருந்தாலும் இப்படித்தான் எடுத்திருப்பார்கள். இஸ்லாமியர்கள் விமானம் கடத்துவார்கள். இஸ்லாமியர்கள் அணுகுண்டு தயாரிப்பார்கள். இறுதியில், இஸ்லாமியர்கள் கொல்லப்படுவார்கள். இவர்களை மன்னியும் பிதாவே என்று ஒரு பாதிரி கைகளை வானத்துக்கு உயர்த்துவார். லாங் ஷாட்டில் வானத்தைக் காட்டி படத்தை முடிப்பார்கள்.
ஆனால், ஹாலிவுட்டையும் மிஞ்சும் சில காட்சிகள் பயணத்தில் இடம்பெறுகின்றன. ஓர் இஸ்லாமிய குழந்தையிடம், தீவிரவாதி வெடிமருந்து பொட்டலத்தைப் புன்னகையுடன் பரிசளிக்கிறான். குரூரத்தின் உச்சம் இது.
இறுதிக் காட்சியில் இஸ்லாமியர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு, அவர்கள் உடல் போர்த்தப்பட்டிருந்த நிலையில், லாங் ஷாட்டில் நால்வரின் இஸ்லாமியப் பெயர்களையும் பளிச்சிடுகிறார்கள். படம் பார்த்துவிட்டு வெளியில் எழுந்து வரும்போது, படத்தின் அடிநாத ஹைலைட்டை மறந்துவிடக்கூடாது என்பதற்காக.
ஒரு சாதாரண பொழுதுபோக்குப் படத்தை, பொழுதுபோக்குப் படமாக மட்டும் பார்க்கமுடியாதா என்னும் கேள்வியை வழக்கம் போல் பலரும் எழுப்புகிறார்கள்.

அவர்களுக்கு சில வார்தைகள்.

நாங்கள் ஏன் இவ்வாறு செய்கிறோம் என்பதற்குக் கடத்தல்காரர்கள் சில நியாயங்களை முன்வைக்கிறார்கள்.
1) காஷ்மிர்.
2) குஜராத்.
3) பாபர் மசூதி இடிப்பு.
காஷ்மிர் பற்றி ஓரிடத்தில் மட்டும அதுவும் மிகவும் மேம்போக்காக ஒரு வசனம். 'குஜராத்', 'மோடி' என்னும் வார்த்தைகளை அந்தத் தீவிரவாதியால் பிரயோகிக்கமுடியவில்லை. கொய்ங் என்று சத்தம் மட்டும் வருகிறது. 'பாபர் மசூதி' என்னும் பெயர் வரும்போதும் இதே சத்தம்தான்.
இது அநியாயம் இல்லையா? ஏன் தீவிரவாதிகளிடம் இரக்கம் காட்டக்கூடாது என்பதற்கான காரணத்தையும், என்கவுண்டர் ஏன் அவசியம் என்பதையும் ஒரு கமாண்டோ நீட்டி முழக்கிச் சொல்வார்.

ஆனால், காஷ்மீரையும், குஜராத்தையும் பாபர் மசூதியையும் மோடியையும் பற்றி ஒரு வார்த்தைகூட யாராலும் பேசமுடியாது. இந்தக் கட்டுப்பெட்டித்தனமான, அயோக்கியத்தனமான, பிற்போக்குத்தனமான ஒரு களத்தில்தான் தமிழ் சினிமா இதுநாள் வரை இயங்கிக்கொண்டிருக்கிறது. பயணம் அதே பாதையில், புது வேகத்துடன், த்ரில்லர் என்னும் அடையாளத்துடன் முன்னேறிச் சென்றிருக்கிறது, அவ்வளவுதான். ஏற்கெனவே பொதுப்புத்தியில் பரவிக்கிடக்கும் இஸ்லாமிய எதிர்ப்பு கருத்தாக்கங்ளை மீண்டும் ஒருமுறை வலுப்படுத்தியிருக்கிறது பயணம்.
பயணங்கள் முடிவதில்லை.

நன்றி; மருதன்

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

உலகமே அறிந்துகொண்டது யார் ?தீவிரவாதிகால், பயங்கரவதிகள் என்று இனிமேல் இஸ்லாமியார்களை தீவிரவாதிகள் என்று பொய்யாக சித்தரிக்கும் எந்த காட்டு கதையும் செல்லாது.
இன்மெலேவாது காட்டு காட்டுக்கத்ையை விட்டு விட்டு உண்மையை சொல்லவதார்க்கு முன் வாருங்கள். இல்லையேல் தெரு நாய் குறைத்தால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.