Subscribe:

புதன், 29 டிசம்பர், 2010

மொசாத் உளவாளிக்கு மரணதண்டனை...

டெஹ்ரான்,டிச.29:இஸ்ரேல் உளவு நிறுவனமான மொசாதிற்காக பணியாற்றிய இளைஞர் ஒருவருக்கு ஈரான் மரணத் தண்டனையை நிறைவேற்றியது.டெஹ்ரானில் எவின் சிறையில்வைத்து அலி அக்பர் ஸியாதத் என்ற மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பல வருடங்களாக மொசாதிற்காக பணிபுரிந்த ஸியாதத் முக்கிய விபரங்களை மொசாதிற்கு அளித்துள்ளார். ஈரானை விட்டு வெளியேற முயன்றபொழுது கடந்த 2008 ஆம் ஆண்டு கைதுச் செய்யப்பட்டார் ஸியாதத்.ஈரானின் ராணுவ ரகசியங்களைக் குறித்த செய்திகளை இவர் மொசாதிற்கு அளித்ததை விசாரணையின் போது ஒப்புக்கொண்டார் என இர்னா செய்தி நிறுவனம் கூறுகிறது.இதற்கு கூலியாக மொசாதிடமிருந்து ஸியாதத்திற்கு 60 ஆயிரம் டாலர் பணம் கிடைத்தது என இவர் புலனாய்வு அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.ராணுவ மையங்கள், போர் விமானங்கள், பயிற்சி விமானங்கள், ஏவுகணைகள் ஆகியன தொடர்பான விபரங்களை இவர் இஸ்ரேலுக்கு அளித்துள்ளார். ராணுவ ரகசியங்கள் இவருக்கு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து இர்னா தெரிவிக்கவில்லை.துருக்கி, தாய்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வைத்து இவர் மொசாத் ஏஜண்டுகளுடன் சந்திப்பை நடத்தியுள்ளார். தேசத்தை காட்டிக்கொடுப்பது ஈரானின் சட்டப்படி மரணத் தண்டனை விதிக்கும் குற்றமாகும்.மொசாதிற்காக பணியாற்றிய டெலிகாம் பொறியாளர் அலி அஷ்தரிக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு ஈரான் மரணத்தண்டனை விதித்திருந்தது.ஈரான் பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்திய பீப்பிள்ஸ் முஜாஹிதீன் ஆர்கனைசேசன் ஆஃப் ஈரான்(பி.எம்.ஒ.ஐ) உறுப்பினர் அலி ஸரேமிக்கும் நேற்று மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

செவ்வாய், 28 டிசம்பர், 2010

இன்ஷாஅல்லாஹ் ஜனவரி முதல்தேதி முதல்...

சமுதாய சொந்தங்களே...
இன்ஷாஅல்லாஹ் வரும் ஜனவரி முதல்தேதி முதல்
"நிதர்சனங்கள்" வலைபூ சிந்தனையை தூண்டும் அரசியல்,
சமூகம்,பொருளாதாரம்,கல்விமேம்பாடு, போன்றவைகள்
குறித்த சிறப்பான ஆக்கங்களை வெளியிடவுள்ளது...

சமுதாய முன்னேற்றதிற்க்கான ஆக்கபூர்வமான சிந்தனைகளை
நடுநிலையோடு எழுதி சமுதாயம் பயன்பெற உங்களின் பங்களிப்பையும்
எதிர்பார்க்கிறேன்...

தங்களின் ஆக்கங்களை இன்ஷாஅல்லாஹ் vengaiibrahim@gmail.com
என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன்.
வஸ்ஸலாம்
நட்புடன்...
வேங்கை.சு.செ.இப்ராஹீம்

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

ராமநாதபுரம்: தீவுக்கு சுற்றுலா சென்றபோது கடலில் படகு கவிழ்ந்து 12 பெண்கள் பலி: மேலும் 8 பேர் உயிருடன் மீட்பு

ராமநாதபுரம், டிச. 26-

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே அமைந்துள்ளது பெரியபட்டிணம். இந்த கிராமத்தை சேர்ந்த பெரும்பாலானோர் ஆஸ்திரேலியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

பெரிய பட்டிணத்தை சேர்ந்த சீனி உருது குடும்பத்தினரும், ஆஸ்திரேலியாவில் இருந்து கடந்த வாரம் வந்திருந்த அவரது உறவினர்களும் சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.

இன்று காலை அவர்கள் 2 மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளில் பெரிய பட்டிணத்திலிருந்து 7 கடல் மைல் தூரத்தில் உள்ள அப்பா தீவுக்கு புறப்பட்டனர். ஒரு படகில் ஆண்கள் 20 பேரும் மற்றொரு படகில் குழந்தைகள் உள்பட பெண் கள் 20 பேரும் சென்று கொண்டிருந்தனர்.

தீவுக்கு சற்று தொலைவில் ஆண்கள் பயணித்த படகு சென்றபோது பின்னால் பெண்கள் வந்த படகை காணவில்லை. அந்த படகை தேடியபோது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பெரிய பட்டிணத்தில் உள்ள தங்களது உறவினர்கள் மற்றும் மீனவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சுமார் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் புறப்பட்டனர். தீவை ஒட்டியுள்ள 4 பகுதிகளுக்கும் தனித்தனியாக பிரிந்து சென்ற அவர்கள் மாயமான படகை தேடினர்.

இந்த தகவல் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஹரிகரனுக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனே கடலோர காவல்படையினர் மற்றும் கடற்படை வீரர்கள் தேடும் பணியை தீவிரப்படுத்தினர். மாயமான படகை தேடும் பணியில் ஹெலி காப்டரும், அதிநவீன ஹோவர்கிராப்ட் படகும் ஈடுபடுத்தப்பட்டது.

இதற்கிடையே மாயமான படகு பலத்த காற்று காரணமாக நடுக்கடலில் மூழ்கியது. அந்த பகுதிக்கு கடற்படையினர் விரைந்தனர். கடலில் மூழ்கி பிணமாக மிதந்த பரக்கத் (வயது36), ஹபீப்நிஷா (38) உள்பட 9 பேரின் உடல்களை மீட்டனர்.மேலும் நடுக்கடலில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 குழந்தைகள் உள்பட 11 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. அவர்கள் அனைவரும் பெண்கள். மீட்கப்பட்ட 8 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கடலில் படகு மூழ்கிய தகவல் கிடைத்ததும் பெரிய பட்டிணத்தை சேர்ந்தவர்கள் கடற்கரைக்கு திரண்டு வந்தனர். சுற்றுலாத்துறையின் அனுமதியின்றி பெரிய பட்டிணத்தில் இருந்து தீவுக்கு படகை இயக்கியது தொடர்பாக போலீசாரும் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த பெரும் விபத்தால் பெரியபட்டிணம் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

சனி, 25 டிசம்பர், 2010

சமூக சிந்தனையாளர் ஷாநவாஷின் உரை...

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் டிசம்பர் 6 அன்று,'தலித் - இஸ்லாமியர் அரசியல் எழுச்சி நாள்' கருத்தரங்கம் நடத்தப் பட்டது.தி.நகர் சர் பிட்டி தியாகராயர் கலையரங்கில், வி.சி.க பொருளாளர் மு.முகமது யூசுப் முன்னிலையில் நடைபெற்ற அந்த நிகழ்வுக்கு, கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை வகித்தார்.

கொட்டித் தீர்த்த பெருமழைக்கு இடையே மிகச் சிறப்பாக குழுமியிருந்த மக்கள் திரளுக்கு மத்தியில், திருமாவின் உரைத்தொகுப்பு அடங்கிய குறுந்தகட்டை வெளியிட்டு ஆளூர் ஷாநவாஸ் பேசியதாவது:
''இந்தக் குளத்திற்கு நீங்கள் விடுதலை வேண்டும் என்று கேட்கின்றீர்கள்; இந்தக் குளத்தில் எங்கள் மக்கள் குளிக்க முடியாது.இந்தக் கிணற்றுக்கு நீங்கள் விடுதலை வேண்டும் என்று கேட்கின்றீர்கள்; இந்தக் கிணற்று நீரை எங்கள் மக்கள்உயிர் போகும் வேளையில் கூட, தாகத்திற்கு அருந்த முடியாது.இந்தச் சாலைக்கு நீங்கள் விடுதலை வேண்டும் என்று கேட்கின்றீர்கள்; இந்தச் சாலையில் எங்கள் மக்களின் பிணங்கள் கூட போக முடியாது.முதலில் எங்களுக்கு சமூக விடுதலை கிடைக்கட்டும். அதன் பிறகு இந்திய விடுதலையைப் பற்றி பேசிக் கொள்ளலாம்'' என்றுகாந்தியின் முன்னால் நின்று ஆண்மையோடு ஒலித்த ஒரே வீரர் புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளில் இங்கே நாம் கூடியிருக்கின்றோம்.

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளைத் தேர்வு செய்து, இந்துத்துவ சக்திகள் பாபர் மஸ்ஜிதை இடித்துத் தகர்த்தார்கள்என்று சொன்னால், அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்து விட்ட ஒரு தவறு இன்றைக்கு இரண்டு சமூகங்களின் எழுச்சிக்கு வழியமைத்திருக்கிறது.தலித்துகள் தலித்துகளாக அணி திரண்டார்கள்; முஸ்லிம்கள் முஸ்லிம்களாக அணி திரண்டார்கள். இரண்டு சமூகமும் தனித் தனியாக இருக்கிற வரை; தனித் தனியே களம் காணுகின்ற வரை இந்துத்துவம் மென்மேலும் எழுச்சியடைந்து வளர்ச்சியடையும். அதைத் தடுக்க வேண்டும் என்றால்; அதை முறியடிக்க வேண்டும் என்றால் இரண்டு சமூகங்களும் இணைய வேண்டும் என்ற கருத்தியலைக் கையிலெடுத்து போராடக் கூடியவராக இன்றைக்கு அண்ணன் திருமாவளவன் இருக்கிறார்.

இங்கே பேசுகிற போது, வி.சி.க பொதுச்செயலாளர் அண்ணன் கலைக்கோட்டு உதயம், மிகச் சிறப்பான கருத்துக்களை எடுத்துச் சொன்னார்கள். முஸ்லிம்களுக்காக நாடாளுமன்றத்தில் வீற்றிருக்கிற ஜே.எம்.ஹாரூன் அவர்களும், அப்துல் ரஹ்மான் அவர்களும் பேசாத விசயங்களைக் கூட, அண்ணன் திருமாவளவன் அவர்கள் பேசினார் என்கிற கருத்தை சொன்னார்கள். உண்மைதான். ஏன் இந்த நிலை?ஹாரூன் அவர்கள் காங்கிரசினுடைய கை சின்னத்தில் போட்டியிட்டு காங்கிரசின் கைப்பாவையாக இருக்கிறார்.அப்துல் ரஹ்மான் அவர்கள் முஸ்லிம் லீக் இயக்கத்தின் சார்பில் நின்று ஜெயித்தாலும், அவர் தி.மு.க வின் உதய சூரியன்சின்னத்தில் நின்று வென்றிருக்கிறார்.அந்தக் கட்சிகள் என்ன முடிவெடுக்கிறதோ; அந்தக் கட்சித் தலைமை என்ன சொல்லுகிறதோ, அதை மீறி ஒரு வார்த்தை கூட பேச முடியாத நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதை உடைத்தெறிந்து வென்ற ஒரே தலைவன் இந்த தமிழ் மண்ணில் அண்ணன் திருமாவளவன் மட்டும் தான். 'நான் பிற கட்சிகளின் சின்னத்தில் நின்று அவர்களின் கைப்பாவையாக சென்றால், இந்த ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு உண்மையாக என்னால் பேச முடியாது. நான் சுய சின்னத்தில் தான் நிற்பேன். தோற்றாலும் பரவாயில்லை' என்று களத்திற்குப் போன அந்தத் துணிவு தான் இன்றைக்கு அவரை நாடாளுமன்றத்தில் பாபர் மஸ்ஜிதிற்காகப் பேச வைத்திருக்கிறது.முஸ்லிம் உறுப்பினர்களை பேசாமல் இருக்க வைத்திருக்கிறது.இங்கே தலித்துகள் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்கிற ரீதியில் பேசினார்கள். நான் முஸ்லிம்கள் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று பேசுகிறேன்.

ஏனென்றால் பாபர் மஸ்ஜித் இடிப்பு என்பது ஏதோ 1992 டிசம்பர் 6 ஆம் நாள் காலையில் திட்டமிட்டு மாலைக்குள் முடிந்து விட்ட ஒரு நிகழ்வு அல்ல. அதற்காக இந்துத்துவ சக்திகள் 60 ஆண்டுகளுக்கு மேலாக திட்டமிட்டிருக்கிறார்கள்; வியூகம் அமைத்து உழைத்திருக்கிறார்கள்; நம்மை சூழ்ச்சியால் முறியடித்திருக்கிறார்கள். ஒரு 60 ஆண்டுகால தொடர் போராட்டத்தினுடைய நீட்சியாக அவர்களால் 1992 டிசம்பர் 6 அன்று, இந்த உலகமே வேடிக்கைப் பார்க்க மிக எளிதாக பாபர் மஸ்ஜிதை இடிக்க முடிந்தது.இன்றைக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது என்று சொன்னால், அந்த தீர்ப்பை கேட்டவுடன் நாம் கொந்தளிக்கிறோம். உண்மையில் தோழர்களே அது 2010 செப்டம்பர் 30 ஆம் நாள் தீர்மானிக்கப் பட்ட தீர்ப்பு அல்ல. 1949 இல் பாபர் மஸ்ஜிதிற்குள் ராமர் சிலைகளைக் கொண்டு வந்து வைத்தார்களே, அப்போதே தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது.அதனுடைய அறிவிப்பு தான் 60 ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கிறது.

நாம் காங்கிரசை நம்பிக்கொண்டு, நீதி மன்றங்களை நம்பிக் கொண்டு, இந்த அரசும் நீதி மன்றங்களும் நமக்கு நீதி செய்யும்;நீதி செய்யும் என்று கூறி இந்த மக்களைத் தவறாக வழிநடத்திக் கொண்டிருக்கிறோம். மாற்று வழிமுறைகளைப் பற்றி சிந்திக்கவோ, மாற்று வழிமுறைகளை இந்த மக்களுக்கு கற்றுக் கொடுக்கவோ இந்த தலைமைகள் தவறியதனால், இன்றைக்குத் தீர்ப்புக்குப் பின் பாபர் மஸ்ஜித் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது என்று கூட தெரியாமல் தடுமாற வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

ஆக, இந்தச் சூழ்நிலையில் இந்த மக்களை அரசியல் சக்தியாக எழுச்சி பெற வைப்பதன் மூலமாகத்தான் இன்னொரு பள்ளிவாசலை இழக்காமல் தடுக்க முடியும். அரசியல் சக்தியாய் எழுச்சி பெற்றால் மட்டும் தான் நமது இழப்புகளில் இருந்து நாம் மீள முடியும்; நமது உரிமைகளை நாம் பாதுகாக்க முடியும்.காங்கிரஸ் அரசும், நீதி மன்றங்களும் சேர்ந்து தான் இன்றைக்கு பாபர் மஸ்ஜிதை கபளீகரம் செய்திருக்கிறார்கள்.பாரதிய ஜனதா அரசு இருக்கும் போது பாபர் மஸ்ஜித் இடிக்கப் படவில்லை. இன்றைக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பும் பாரதீய ஜனதா அரசாங்கத்தில் வரவில்லை. 60 ஆண்டுகளுக்கு முன் பாபர் மஸ்ஜிதிற்குள் ராமர் சிலைகளை வைத்தார்களே அப்போதும்காங்கிரசு அரசுதான்; அந்த சிலைகளுக்கு பூஜை செய்வதற்காக கதவைத் திறந்து விட்டதும் காங்கிரசு அரசுதான்; பாபர் மஸ்ஜித் இடிப்பை வேடிக்கைப் பார்த்ததும் காங்கிரசு அரசுதான்; இன்றைக்கு கேவலமான தீர்ப்பும் காங்கிரசு அரசில் தான் வந்திருக்கிறது.

அப்படியென்றால் பாரதிய ஜனதா தானே இந்துத்துவத்தின் அரசியல் சக்தி. அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது கூட நடக்காததுகாங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது நடக்கிறது என்று சொன்னால், இந்துத்துவம் ஆட்சியில் இருக்கும் போதுதான் முஸ்லிம்களுக்கு எதிராக, ஒடுக்கப் பட்ட மக்களுக்கு எதிராக சோதனைகளும் வேதனைகளும் நடக்கும் என்றில்லை.அது ஆட்சியில் இல்லாத போதும் மிகக் கூர்மையாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அது காங்கிரசின் வடிவத்தில் கூட இயங்கிக் கொண்டிருக்கும் என்பதைத்தான் இந்த சம்பவங்கள் நமக்கு எடுத்தியம்புகின்றன.

காங்கிரசை அகற்றி விட்டு பாரதிய ஜனதாவையோ, அல்லது பாரதிய ஜனதாவை அகற்றி விட்டு வேறொருவரையோ பதவியில் அமர்த்தி விட்டால் நமக்கு விடிவு கிடைத்து விடுமா என்றால் நிச்சயம் இல்லை. யார் பாதிக்கப் பட்டவர்களாக இருக்கிறார்களோ; யார் பாதிப்பின் வலியையும், வேதனையையும் நேரடியாக உணர்ந்தவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் ஆட்சியில் அமரும் போது தான், பாதிக்கப் பட்ட ஒடுக்கப் பட்ட மக்களுக்கு உண்மையான விடிவு கிடைக்கும்.
இன்றைக்கு தலித்துகளும் முஸ்லிம்களும் இந்துத்துவத்தால் பாதிக்கப் பட்டவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பின்னணியோடு தான் நாங்கள் திருமாவை நம்பிக்கையோடு பார்க்கிறோம். அவர் எங்கள் விசயத்தில் எடுத்துப் போராடிய எந்த ஒரு இடத்திலும் சோரம் போனதாகவோ, அல்லது பேசிவிட்டு திரும்ப வாங்கிக் கொண்டதாகவோ இல்லை. மிகத் தெளிவாகப் பேசுகிறார். பேசுவதற்கு முன் யோசித்துப் பேசுகிறார். தீவிரமாக களமாடுகிறார். அதனால் தான் எங்களுக்கு மீண்டும் மீண்டும் அவர் மீதான நம்பிக்கை உறுதிப் பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆக, நாம் நம்மை சுய பரிசோதனை செய்து கொண்டு, கடந்த காலங்களில் நமது இழப்புகளுக்கு என்ன காரணம் என்பதை மீளாய்வு செய்து கொண்டு, நாளையை நமக்கானதாக மாற்றுவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். அது இங்கே தனித் தனியே நாம் களம் காணுவதால் நடக்காது. வரலாறு நமக்கு அந்தப் பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறது. நாம் இணைந்து சேர்ந்து அதிகாரத்தை வென்றெடுப்பதற்கு என்னென்ன வழிமுறைகள் உண்டோ அவை அனைத்தையும் கையிலெடுக்கக் கூடிய மக்களாக நாம் மாற வேண்டும்.வாய்ப்புக்கு நன்றி சொல்லி விடைபெறுகிறேன்.