இஸ்லாமியர்களைத் தவிர்த்த தலித் சமூக விடுதலையும், தலித்துக்களைத் தவிர்த்த இஸ்லாமிய சமூக விடுதலையும் சாத்தியமில்லை என்ற கொள்கை முழக்கத்தை அரசியல் லட்சியமாக அறிவித்துள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீதும், திருமாவளவன் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வரும் நிலையில், அக்கட்சியின் பொருளாளரான திரு.முகமது யூசுஃப் அவர்களிடம் எடுக்கப்பட்ட நேர்காணல்.
சந்திப்பு: மால்கம் X இராசகம்பீரத்தான்
சந்திப்பு: மால்கம் X இராசகம்பீரத்தான்
கேள்வி: இன்றைய சூழலில் தமிழக அரசியல் கட்சிகளின் தலைமைப் பதவிகளில் ஒரு இஸ்லாமியரும் காணப்படாத நிலையில் விடுதலை சிறுத்தைகள் இஸ்லாமியர்களுக்கு தலைமைப் பதவிகளிலும் பிரதிநிதித்துவத்தை கொடுத்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இஸ்லாமியர்களின் அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்கும் தளமாக இருக்குமா?
முகமது யூசுஃப்: “எரிகின்ற சேரிகளிலிருந்தும், உடைகின்ற மசூதிகளிலிருந்தும் புறப்படுகிறது புரட்சியின் சூறாவளி” என்று முழங்கிய திருமாவளவனின் அரசியல் கருத்தாக்கத்தால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்குள் நுழைந்தவன் நான்.
இந்துத்துவவாதிகளினால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர், விசுவரூபம் எடுத்த இஸ்லாமியர்களின் எழுச்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கு சரியான தலைமைகள் இல்லாமல் போனது. மேலும் சிறுபான்மை இஸ்லாமியர்களின் தலைமைக்குள் ஒற்றுமையில்லாமல் தங்களுக்குள்ளாகவே மோதிக் கொள்ளும் குழு அரசியல் மனப்பான்மை அதிகமானது. அதனால் இஸ்லாமியர்களின் அரசியல் தலைமை வெற்று இடமாகவே இருந்து வந்தது.
சாதியத்தால் ஒடுக்கப்பட்ட தலித் சமூகமும், இந்துத்துவ ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட இஸ்லாமிய சமூகமும் ஒரே மாதிரியான சமூகப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றன. இருவரின் சமூக விடுதலைக்கும் ஒரே மாதிரியான அரசியல் தளம் இன்று அவசியமானாதாகும். மேலும் இந்துமதத்தின் சாதியக் கொடுமைகளிலிருந்து விடுபட்டு சுயமரியாதை காண்பதற்காக இஸ்லாத்தில் இணைந்த இந்திய இஸ்லாமியர்கள் தலித்துகளின் தொப்புள் கொடி உறவாக இருப்பதாலும் தலித்துகளும், இஸ்லாமியர்களும் இயல்பாகவே இணைந்து போராடுவதற்கு சாத்தியமுள்ள சமூகமாக இருக்கின்றனர். அதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி இரு சமூகத்திற்குமான பொதுத் தளமாக இருக்கின்றது. திருமாவளவன் அவர்களிடம் எல்லா தேசிய இனப் பிரச்சனைகளிலும் ஈடுபடும் அரசியல் அணுகுமுறைகளும், தொலைநோக்குப் பார்வையும் இருப்பதால் இன்று அனைத்து தரப்பு மக்களும் விரும்பக்கூடிய தலைவராக இருக்கிறார்.
மற்ற ஏனைய கட்சிகளிலும் மொழி சார்ந்த, இனம் சார்ந்த சிறுபான்மைப் பிரிவுகள் இருந்தாலும் அது உண்மையிலேயே சிறுபான்மை இனத்தவர்களுக்கான உரிமைகளை நிலைநாட்டும் அமைப்புகளாக இல்லை. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இஸ்லாமிய சனநாயகப் பேரவை மிகவும் தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது, இஸ்லாமியர்கள் சிலர் பெயரளவில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தபோதும் அவர்கள் இதுவரை வாய்ப்புகளை சரிவரப் பயன்படுத்தி இஸ்லாமியர்களின் எந்தப் பிரச்சனைகளையும் பேசியது இல்லை.
திருமா அவர்களின் முதல் பாராளுமன்ற முழக்கமே இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டினைப் பற்றிதான், பிறகு காஷ்மீர தேசியப் பிரச்சனையை மிகவும் உறுதியுடன் பேசினார். அதே போல் இஸ்லாமிய சனநாயகப் பேரவையின் சார்பில் வேலூர் மசூதி மீட்புப் போராட்டம் நடத்தியதும், கேரளாவில் மதானி அவர்களின் கைதினைக் கண்டித்து முதன் முதலில் எதிர்ப்பு தெரிவித்ததும் திருமா அவர்களே. பாபர் மசூதி மதவெறியர்களால் இடிக்கப்பட்டபோது அதே இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட வேண்டும் என்று அயோத்தி பயணத்திற்கு துணிந்து அழைப்பு விடுத்ததும், தலித்-இஸ்லாமிய ஒற்றுமை மாநாடுகள் நடத்தி வருவதும், வக்ஃப் நிலங்கள் மீட்புப் போராட்டங்களும் குறிப்பிடத்தக்கவை. டிசம்பர் 6ஐ தலித்- இஸ்லாமியர்கள் எழுச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது. காயிதே மில்லத் அவர்களை நினைவுகூறும் பொருட்டு விழாக்கள் எடுக்கிறோம். மற்ற கட்சித் தலைவர்கள் எல்லாம் இஸ்லாமியர்களின் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் சம்பிரதாயத்திற்காக கலந்து கொள்ளும்போது திருமா அவர்கள் மட்டும் சஹர் செய்து உண்ணாநோன்பிருந்து இஸ்லாமியர்களுடன் உணர்வுடன் நோன்பு திறப்பவராக உள்ளார்.
இஸ்லாமியர்களுக்காக குரல் கொடுக்க சரியான தலைவர்கள் இல்லாத தேக்க நிலையில் இஸ்லாமியர்களுக்காகவும் குரல் கொடுக்கும் திருமா அவர்களின் சமூக தொலைநோக்குப் பார்வையினால் இன்றைய இஸ்லாமிய இளைஞர்கள் பெருமளவில் விடுதலைச் சிறுத்தைகளில் ஈர்க்கபட்டு வருகின்றனர்.
முக்கியமாக தமிழகத்தில் இன்று மதக்கலவரங்கள் இல்லை. இஸ்லாமியர்களுக்கு எதிராக தலித் மக்களை மதக்கலவரத்தில் ஈடுபடுத்தி வந்த இந்துத்துவவாதிகளின் சதிகள் விடுதலை சிறுத்தைகளால் முறியடிக்கப்பட்டது. இதுவே விடுதலை சிறுத்தைகளின் பெரும் சாதனையாக இருக்கிறது.
தலித்துக்களுக்கும் மட்டும் அல்லாமல் இஸ்லாமியர்களுக்கும் மற்றும் ஏனைய சிறுபான்மையினர்களுக்கும் ஒப்பற்ற தலைவராக திருமாவளவன் அவர்கள் இருந்து வருகிறார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
கேள்வி: ஒரு தலித்திய அமைப்பாக தோன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்னும் ஒரு சாதிய அமைப்பாகவே பார்க்கப்படுகிறதா? அதன் சமகால வளர்ச்சியைப் பற்றி உங்களின் கருத்து என்ன?.
முகமது யூசுஃப்: தாழ்த்தப்பட்ட மக்களின் சாதிய விடுதலைக்காக ஏற்படுத்தப்பட்ட இயக்கமாக தோன்றி பிறகு தேர்தல் அதிகாரத்தை வென்றெடுக்க அரசியலில் ஈடுபடுவதாக முடிவெடுத்து அன்று இருந்த மூப்பனாரின் தமாக உடன் இணைந்து தேர்தலை முதன் முறையாக 1999ல் சந்தித்தது. பிறகு வேளச்சேரி தீர்மானத்திற்குப் பிறகு 2007ல் சாதிய அடையாளத்தை முன்னிருத்தாமல் பொது நீரோட்ட அரசியலில் ஈடுபட்டு அதன் மூலம் அரசியல் அங்கீகாரத்தை வென்றெடுப்பதாக முடிவெடுக்கப்பட்டது.
இன்று பொது அரசியல் தளத்தில் தவிர்க்கமுடியாத சக்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாறியுள்ளது.
மேலும் பல இணை கட்டமைப்புகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளடக்கியதாக இருக்கிறது. இசுலாமிய சனநாயக பேரவை, மகளிர் விடுதலை இயக்கம், இளம்சிறுத்தைகள் எழுச்சி பாசறை, தமிழக உழவர் இயக்கம், முற்போக்கு மாணவர் கழகம், அரசு ஊழியர் ஐக்கியப் பேரவை, விடுதலை கலை இலக்கியப்பேரவை, தொழிலாளர் விடுதலை முண்ணனி, பழங்குடியினர் வி.இ, சிறுவர் எழுச்சி மன்றம், மீனவர் மேம்பாட்டு பேராயம் தமிழக கிருத்துவ சமூக நீதிப்பேரவை, நரி குறவர்கள், கொத்தடிமை ஒழிப்பு முன்னணி, சமூக நல்லிண இயக்கம், அரவாணிகள் நலசங்கம், மக்கள் பண்பாட்டு இயக்கம், துரும்பர் விடுதலை இயக்கம் இயக்கம் என பல இயக்கங்களைக் கொண்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் இன்று தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் கட்சியாகவும், ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்குமான கட்சியாக தமிழகத்தில் வளர்ந்து வருகிறது.
மேலும் பல இணை கட்டமைப்புகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளடக்கியதாக இருக்கிறது. இசுலாமிய சனநாயக பேரவை, மகளிர் விடுதலை இயக்கம், இளம்சிறுத்தைகள் எழுச்சி பாசறை, தமிழக உழவர் இயக்கம், முற்போக்கு மாணவர் கழகம், அரசு ஊழியர் ஐக்கியப் பேரவை, விடுதலை கலை இலக்கியப்பேரவை, தொழிலாளர் விடுதலை முண்ணனி, பழங்குடியினர் வி.இ, சிறுவர் எழுச்சி மன்றம், மீனவர் மேம்பாட்டு பேராயம் தமிழக கிருத்துவ சமூக நீதிப்பேரவை, நரி குறவர்கள், கொத்தடிமை ஒழிப்பு முன்னணி, சமூக நல்லிண இயக்கம், அரவாணிகள் நலசங்கம், மக்கள் பண்பாட்டு இயக்கம், துரும்பர் விடுதலை இயக்கம் இயக்கம் என பல இயக்கங்களைக் கொண்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் இன்று தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் கட்சியாகவும், ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்குமான கட்சியாக தமிழகத்தில் வளர்ந்து வருகிறது.
கேள்வி: தமிழகத்தில் இஸ்லாமியர்களின் பொதுப் பிரச்சனைகளில் பொதுவுடமைவாதிகளும், பெரியாரியவாதிகளும், மதச்சார்பற்றவாதிகளும் முன்னின்று போராடி வருகின்றனர், ஆனால் இஸ்லாமியர்களோ எந்த ஒரு தேசிய இனப் பிரச்சனைகளிலும் ஈடுபடுவது இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது, அதைப் பற்றி ஒரு இஸ்லாமியராக உங்களின் கருத்து என்ன?
பதில்: இன்றைய இஸ்லாமியத் தலைவர்களில் யாரும் திரு காயிதே மில்லத் அவர்களைப் போலவோ அல்லது ஷஹித் பழனி பாபா அவர்களைப் போன்றோ தனிபட்ட ஆளுமையுடையவர்களாக இல்லை என்பதும் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. இன்றைய இஸ்லாமிய அமைப்புகளில் ஒற்றைத் தலைமையோ, அரசியல் ஆளுமையோ, தொலைநோக்குப் பார்வையோ இல்லை.
பன்மைச் சமூக கூட்டத்தில் வாழ்ந்து கொண்டு மாற்று சகோதரர்களுக்கு வாழ்த்து செய்திகள் சொல்வதில் கூட தயங்கி நிற்கும் சமூகமாகத்தான் இருக்கிறது.
மேலும் இன்று வெகுஜன அரசியல் என்னவென்று தெரியாமலும், இஸ்லாமிய மார்க்கத்தை அரசியலில் கலந்து தங்களுக்குள்ளாகவே தனிமைப்பட்டும் கிடக்கின்றனர். இஸ்லாம் என்பது வாழ்வியல் நெறி மட்டுமே. அதை அரசியலில் கலக்கக் கூடாது. ஆனால் இங்கு மார்க்கத்தை அரசியலாக்கி வருவது வருந்தத்தக்கது.
இஸ்லாமிய அமைப்புகளிடம் மதம் சார்ந்து பார்க்கும் பார்வை மட்டும் தான் இருக்கிறது.
ஈழத்தில் தமிழர்கள் கொடுங்கோலன் ராசபக்சேவினால் கொன்று குவிக்கப்பட்ட போதும் ஒருசிலரைத் தவிர இங்குள்ள பெரும்பாலான இசுலாமியர்கள் அதற்காகப் போராடவில்லை. தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட போதும் அதற்காக இங்குள்ள இஸ்லாமிய அமைப்புகள் போராடவில்லை. அடையாளங்களை மட்டுமே பார்க்கும் சமூகமாகத்தான் இஸ்லாமிய சமூகம் இருக்கிறது, இது மாறவேண்டும்.
வணிக சமூகமாக இருக்கும் இஸ்லாமிய சமூகத்தில் வாழ்வாதாரப் பிரச்சனைகளிலேயே அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அதைத் தாண்டி சமூகப் பிரச்சனைகளிலும் ஈடுபடவேண்டும்.
ஈழத்தில் தமிழர்கள் கொடுங்கோலன் ராசபக்சேவினால் கொன்று குவிக்கப்பட்ட போதும் ஒருசிலரைத் தவிர இங்குள்ள பெரும்பாலான இசுலாமியர்கள் அதற்காகப் போராடவில்லை. தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட போதும் அதற்காக இங்குள்ள இஸ்லாமிய அமைப்புகள் போராடவில்லை. அடையாளங்களை மட்டுமே பார்க்கும் சமூகமாகத்தான் இஸ்லாமிய சமூகம் இருக்கிறது, இது மாறவேண்டும்.
வணிக சமூகமாக இருக்கும் இஸ்லாமிய சமூகத்தில் வாழ்வாதாரப் பிரச்சனைகளிலேயே அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அதைத் தாண்டி சமூகப் பிரச்சனைகளிலும் ஈடுபடவேண்டும்.
மேலும் அவர்களின் அரசியல் பிரச்சனைகளைக் கூட அவர்களால் வென்றெடுக்க முடியாத நிலையில் உள்ளனர். நிச்சயமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இஸ்லாமியர்களுக்கு அரசியல் பயிற்சி அளிக்கும் தளமாக இருக்கும் என்று நம்பலாம்.
இசுலாமிய சனநாயகப் பேரவை எல்லா தேசியப் பிரச்சனைகளிலும் மிகவும் முனைப்புடன் போராடிவருகிறது. ஈழப்படுகொலைகளைக் கண்டித்து போராட்டம், மீனவர்கள் படுகொலைகளை எதிர்த்து போராட்டம், காஷ்மீர மக்களுக்கான ஆதரவுப் போராட்டங்கள் என எல்லா முக்கிய தேசியப் பிரச்சனைகளிலும் ஈடுபட்டு வருகின்றது.
கேள்வி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் திருமா என்ற தனி நபர் வழிபாடு அதிகமாக இருப்பதுபோல் தோன்றுகிறது, ஆனால் இஸ்லாமியர்கள் தனிநபர் வழிபாட்டினை முற்றிலுமாக எதிர்ப்பவர்கள். இந்நிலையில் இஸ்லாமியர்கள் விடுதலை சிறுத்தை கட்சியில் எப்படி முழு மனதோடு இணைந்து செயல்படுவார்கள்?
முகமது யூசுஃப்: இஸ்லாமியர்கள் பொது நிகழ்ச்சிகளில் கூட தனி நபர்களைப் புகழ்ந்தோ, வாழ்க என கோசங்கள் போடாமல் ஏக இறைவனுக்கே புகழ் என்ற கண்ணியம் பாராட்டுபவர்கள். இஸ்லாமிய சனநாயகப் பேரவையில் எப்பொழுதும் தனி நபர் வழிபாடு கிடையவே கிடையாது.
இஸ்லாம் தோன்றிய இத்தனை வருடங்களிலும் இஸ்லாமியர்களிடம் உருவ வழிபாடு என்பது ஊடுறுவாமல் இருப்பதற்கும், தனி நபர் வழிபாடுகள் அதீத புகழ்ச்சிகள் போன்றவைகள் இல்லாதற்குக் காரணம் பெருமானார் முகமது நபி அவர்களும், அவர்களின் தோழர்களும் உருவப் படங்களையோ அல்லது ஓவியங்களையோ இல்லாமல் பார்த்துக் கொண்டதும், அதற்கான எந்தத் தடயங்களும் இல்லாமல் மிக நுண்ணிய கவனிப்புடனும் பாதுகாத்து வந்ததேயாகும் என்று வியப்புடன் கூறுபவர் திருமா அவர்கள்.
திருமா அவர்களும் இதையே தன் கட்சியினரும் கடைபிடிக்க வேண்டும் என்று விரும்புகிறார். மேலும் விடுதலைச் சிறுத்தைகளின் கருத்துக்களை தாங்கிப் பிடிக்க வலுவான ஊடகங்கள் கிடையாது. எங்கள் கட்சி பல லட்சம் மக்களைத் திரட்டி ஒரு மாநாடே நடத்தினாலும் ஆதிக்க சக்திகளால் அது இருட்டடிப்பு செய்யப்படுகிறது; இல்லை என்றால் பெட்டி செய்தியில் வருகிறது.
இன்றைய நிலையில் ஒற்றைத் தலைமை என்பது அரசியல் வெற்றிக்கு முக்கியமானதாகும். ஆனால் தனி நபர் வழிபாடு என்பது எங்கள் கட்சியில் இல்லை. இரவு 3 மணிக்குக் கூட பொது மக்களுக்கான சந்திப்புகளை வழங்கி அவர்களுடன் தடையின்றி உரையாடும் ஒரே தலைவர் திருமா அவர்கள் மட்டுமே.
தனக்கென்று வாழ்வதைப் பற்றி ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் தமிழர்களுக்காக தன்னையே அர்பணித்த தலைவர் திருமா அவர்கள். எந்த நிலையிலும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் கொண்ட கொள்கைகளுக்காகப் போராடும் ஒப்பற்ற தலைவராகத் தான் திருமா இருக்கிறார்.
கேள்வி: தமிழகத்தில் இஸ்லாமியர்களும் தலித்துகளும் இணைந்து போராட வேண்டிய சூழலில் உள்ளனர். ஆனால் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலையினை வைக்கவிடாமல் எதிர்த்த சில இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக திருமா அவர்கள் நடந்து கொண்டது, பல நடுநிலையாளர்களை வருத்தமடையச் செய்தது. இஸ்லாமியர்களுக்கும் தலித்துகளுக்கும் போதுமான புரிந்துணர்வுகள் இல்லையா? அம்பேத்கர் அவர்களின் மீது பொதுவுடமைத் தோழர்களுக்கு இருக்கும் மரியாதை கூட திருமா அவர்களுக்கு இல்லை என்று நடுநிலையாளர்கள் வருத்தப்படுகின்றனர்.
முகமது யூசுஃப்: அந்த சம்பவம் இரண்டு இஸ்லாமியர்களுக்கு இடையேயான உள்ளூர் அதிகாரப் போட்டியாகும். அதையே தலித், இஸ்லாமிய விரோத அரசியல் கலவரமாக மாற்றப்பட்டது. இதில் இரண்டு சமூகத்திற்கு விரோதம் வந்துவிடாமல் திருமாவளவன் அவர்கள் சமாதானம் செய்து வைத்ததை அரசியலாக்கி விட்டனர். விடுதலைச் சிறுத்தைகள் மசூதியை விட்டு தள்ளி தனது சொந்த செலவில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு சிலை வைத்து சமூக நல்லிணக்கத்தை விடுதலைச் சிறுத்தைகள் உருவாக்கியுள்ளது.
ஆனால் திருமாவினால் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டு மக்களிடையே கலவரங்கள் வரவேண்டும் என விரும்புகிறவர்கள் தலித் இஸ்லாமிய விரோதம் ஏற்படுத்தி இந்த இரண்டு இன மக்களையும் பிரித்தாள வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகின்றனர். ஆனால் நாங்கள் மிக கவனமாக இருக்கிறோம்.
தலித், இஸ்லாமிய ஒருங்கிணைப்புகளை உறுதி செய்தும் இவ்விரு சமூக மக்களுக்கிடையேயான புரிதல்களையும் தமிழகம் முழுவதும் நாங்கள் ஏற்படுத்தி வருகின்றோம். இந்த உறவுகளுக்குள் எந்த பிளவும் ஏற்படாதவாறு நாங்கள் பார்த்து வருகின்றோம்.
கேள்வி: இஸ்லாமியர்களுடனான சிறுத்தைகளின் அரசியல் உறவுகள் எப்படி இருக்கும்?
முகமது யூசுஃப்: திருமா அவர்கள் இஸ்லாமியர்களின் ஓட்டு ஆதாயத்திற்காக குரல் கொடுப்பவர் அல்ல. அவர் இஸ்லாமியர்களுக்காக தோளோடு தோள் நின்று போராடும் களப் போராளி.
தலைமைக்கான போட்டிகளில் சிக்கித் தவிக்கும் இசுலாமியத் தலைவர்களால் இஸ்லாமிய அமைப்புகள் தமிழகத்தில் ஒருங்கிணைந்து ஒரு பேரியக்கமாக மாறும் என்பது சாத்தியம் இல்லாதது.
தாழ்த்தப்பட்டோரும் முஸ்லிம்களும் ஒருங்கிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம். சார்ந்து இருக்கத் தேவையில்லை; சேர்ந்து இருப்போம் என்பது தான் இஸ்லாமியர்களுடனான விடுதலை சிறுத்தைகளின் நிலைப்பாடு.
கேள்வி: தலித் இஸ்லாமியர்களின் சமூக மேம்பாட்டிற்கு இடையூறாக இருக்கும் மிக முக்கிய காரணங்களாக நீங்கள் கருதுவது எது?
முகமது யூசுஃப்: வலுவான பொருளாதாரமும், நல்ல கல்வியும்தான் இந்த இரண்டு சமூகங்களையும் மேன்மையடையச் செய்யும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.
பல ஆயிரம் கோடி மதிப்புள்ள ஆக்ரமிக்கப்பட்ட வக்ஃப் நிலங்கள் மீட்கப்படுவதன் மூலமாக இஸ்லாமிய சமூகத்தினரின் வாழ்வாதாரங்கள் நிச்சயமாக உயர்வடையும்,
அதே போல் தலித் மக்களுக்கா ஒதுக்கப்பட்ட நிதி ஆதாரங்கள் அம்மக்களுக்கு முழுமையாக வந்து சேர்ந்தாலே அவர்களின் பொருளாதார நிலை மேம்படும்.
கேள்வி: தேர்தல் அரசியல் நிலைப்பாடு எடுப்பதற்கு முன் இருந்த திருமாவின் போராட்டக் குணங்கள் இன்று மங்கி விட்டதாகத் தோன்றுகிறது. போராட்டங்கள் மறைந்து வெறும் கூட்டமாகவும், மாநாடுகளாகவும் தான் இருக்கிறது. அதிகாரத்தை நோக்கிய விடுதலைச் சிறுத்தைகளின் பயணத்தில் திருமா அவர்கள் அதிகமான சமரசத்திற்கு ஆளாகுவது போன்ற நிலை இருக்கிறதே
முகமது யூசுஃப்: இது தவறான செய்தி, திருமா அவர்கள் எந்த நிலையிலும் கொள்கை இழக்காத ஒரு போராளியாகத் தான் இருக்கிறார், யாருடனும் சமரசம் செய்யாமல் தன் மனதில் இருப்பதை உறுதியுடன் சொல்லக் கூடியவர். இன்றளவும் களத்தில் நின்று போராடி வருபவர். அதே நேரத்தில் பிரச்சனைகளை அந்த கணத்திற்கு ஏற்றார் போல் மிகவும் திறமையாக கையாண்டு தீர்வு காணக்கூடியவர். மிகவும் நுட்பமான சிக்கலான பிரச்சனைகளில் பொதுமக்களுக்குள் எந்த குழப்பங்களும், கலகங்களும் வந்துவிட கூடாது என்ற கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்படுபவர்.
தனக்குள்ள அதிகாரத்தைக் கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டும் வருகிறார். ஆனால் எதிரிகளோ கலகங்களும், அமைதியின்மையும் வரவேண்டும் அது திருமாவின் வளர்ச்சியை பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகின்றனர். ஊடகங்களும் திருமாவளவனின் போராட்டங்களையும் அவர் சார்ந்த செய்திகளையும் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்து வருகின்றனர். எந்த ஒரு கொள்கையும் இல்லாத கோட்பாடுகளும் இல்லாத சினிமா நடிகர்களுக்கெல்லாம் ஊடகத்தில் திட்டமிட்டே வரம்பு மீறிய வெளிச்சம் தரப்படுகிறது, கொள்கையுடன் தமிழனத்திற்காகப் போராடுபவர் இருட்டடிப்புக்கு உள்ளாவது மிகவும் வேதனையான விசயமாகும்..
கேள்வி: ”அத்துமீறு அடங்க மறு, திமிரி எழு திரும்ப அடி “ போன்ற வாசகங்கள் இன்று வன்செயல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் வழிவகுத்துள்ளது. கட்டப்பஞ்சாயத்துக்கள், சொத்து பறிமுதல்கள் என மக்கள் அச்சமடைந்து இருப்பதாக சொல்லப்படுகிறதே.. கட்சியின் தொண்டர்களுக்குத் தேவையான நடைமுறை பண்பாட்டு ஒழுக்கங்களை கற்றுத் தருகிறதா உங்கள் கட்சி?.
முகமது யூசுஃப்: விடுதலைச் சிறுத்தைகளை நோக்கி மட்டும் குற்றம் சாட்டுவது என்பது பொதுப்புத்தியினரின் குற்றச்சாட்டாகவே நான் கருதுவேன்.
எல்லா அரசியல்வாதிகளும் அப்படித்தான் இருக்கிறார்கள் ஆனால் அது ஒரு பெரும் குற்றமாகக் கருதப்படுவது இல்லை. ஆண்டாண்டு காலம் அடிமைப்பட்டுக் கிடந்தவன் மட்டும் குரல் கொடுக்கக் கூடாது? வெள்ளை வேட்டி சட்டை அணியக் கூடாது, அதிகாரம் செய்யக் கூடாது? விடுதலை சிறுத்தைகளின் ஒரு சிலரது நடவடிக்கைகளை மட்டும் கோடிட்டுக் காட்டுவது என்பது முழுக்க முழுக்க ஆதிக்க மன நிலையைத்தான் காட்டுகிறது. ஆனால் எங்கள் கட்சியில் 99 சதவீதம் நடக்கின்ற ஆரோக்கியமான நல்ல நிகழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்ட ஊடகங்கள் இல்லை.
“அத்துமீறு, அடங்க மறு, திமிரி எழு, திருப்பி அடி” போன்ற வாசகங்கள் அடங்கிக் கிடந்த சமூகத்திற்கு தேவையானதாக இருந்தது. ஆனால் இப்பொழுது எங்கள் அமைப்பினர்களை கல்வியாளர்களாக, பண்பாட்டு அரசியல் தெளிவு உடையவர்களாக, நேர்மறை அரசியல் பாதைகளை காட்டி பயிற்சி அளித்து வருகிறோம்.
கேள்வி: எனது தமிழ் இனத்தைக் கொன்றொழித்த காங்கிரசும், அதற்கு துணை போன திமுகவுமே எமது எதிரிகள் அவர்களை எதிர்த்து நாம் தமிழர் இயக்கம் பிரச்சாரம் செய்யும் என்றும், ஆனாலும் தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் விடுதலைச் சிறுத்தைகளையும், பாமகவையும் எதிர்க்கமாட்டோம் என்று எதிரணியில் இருந்தாலும் சீமான் அவர்கள் கூறுகிறார். அதைப் பற்றி உங்களின் கருத்து என்ன?.
முகமது யூசுஃப்: தமிழ்த் தேசியம் வலியுறுத்தும் எல்லா இயக்கங்களுமே சகோதர இயக்கங்கள் தான். காலத்தின் சூழ்நிலையில் வேறு தளங்களில் இருந்தாலும் வெவ்வேறு பாதைகளில் பயணித்தாலும் நோக்கமும் லட்சியமும் ஒன்று தான். செந்தமிழன் சீமான் அவர்களும், எழுச்சித் தமிழன் திருமாவளவன் இருவரும் மாவீரன் பிரபாகரின் அன்புத் தம்பிகள் தானே. அவர்களுக்குள் இயல்பாகவே சகோதரத்துவம் இருக்கத் தானே செய்யும். இருவரும் ஒருவர் மேல் ஒருவர் நட்பும் மரியாதையும் கொண்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு இடையே இருக்கும் மயிரளவு இடைவெளிகளையும் மலையளவு பிளவாக உருவாக்க எதிரிகள் முயன்று வருகின்றனர். தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவு என்பது தமிழன் மரபு. தமிழ் தேசியம் பேசுபவர்களை திருமா அவர்கள் முழுமனதோடு ஆதரித்து வருகிறார். யாரும் யாருக்கும் போட்டியல்ல, தமிழ்த் தேசிய இயக்கங்கள் மிகவும் பலமாக எங்கள் பொது எதிரிகளை எதிர்த்து வருகிறோம்.
நன்றி:கீற்று வலைத்தளம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக