Subscribe:

சனி, 26 மார்ச், 2011

துரோகத்தின் பரிசு தோல்வி...!!!

தமிழகத்தின் சட்டபேரவைக்கான வேட்புமனுதாக்கல்
இன்றுடன் நிறைவு பெற்றுவிட்டது... மாநிலம்முழுவதும்
தேர்தல்களம் சூடுபிடிக்க துவங்கிவிட்டது... பரபரப்பான
பரப்புரைகள்... விறுவிறுப்பான இலவச அறிவிப்புகள்...
என்று மாநிலத்தின் இரண்டு பெரும் கட்சிகளான திமுக அதிமுக
ஆகியவற்றின் தலைமையிலான கூட்டணி கட்சிகள் தமிழகத்தை
தேர்தல்திருவிழா கொண்டாடதினால் திக்குமுக்காடவைக்க துவங்கிவிட்டார்கள்...
 
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஒருநாள் முதல்வர் போல
சில நாட்கள் மட்டும் எஜமானர்களாக அரசியல்வாதிகளால்
ஆராதிக்கப்படும் வாக்காளப்பெருமக்கள் யாருக்கு வாக்களிப்பது
டிவியை போனமுறை தந்துவிட்டு இம்முறை கிரைண்டர் தருவேன் என்பவருக்கா...?
இல்லை கிரைண்டருடன் மிக்சியும் சேர்த்து தருவேன் என்பவருக்கா..?
என்கிற தீராத குழப்பத்தில்...
 
இந்த தருணத்தில் சில விசயங்களை வாழ்வுரிமை மறுக்கப்பட்ட
மூன்றாம்தரமாக வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில்
இருக்கிறோம். சிந்தனை வளம் நம்மில் இல்லாததினால் இழந்தது ஏராளம்...
ஆகவே இனியாவது சிந்திக்க பழகவேண்டியது கட்டாயம்... யாருக்கு வாக்களிப்பது
என்கிற கேள்வியைவிட யாருக்கு வாக்களிக்க கூடாது என்கிற கேள்விதான்
இப்போது நமக்கு தேவை...!
 
எப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் ஏறக்குறைய அணைத்து
(ஒரு சில கட்சிகளை தவிர அவைகள் குறித்து பின்னுரையில் பார்ப்போம்)
அரசியல் கட்சிகளுமே முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாய்ப்புதந்துள்ளது
மகிழ்ச்சிக்குரியது...
 
திமுக முஸ்லிம்களின் தியாகத்தில் வளர்ந்த இயக்கம்... இந்த சட்டப்பேரவை
தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் சகோ.அசன் முகமது ஜின்னா, மதுரை மத்தியில்
சகோ.முகமது கவ்ஸ், பாளையங்கோட்டையில் அமைச்சர் மைதீன்கான், தஞ்சையில் 
அமைச்சர் உபயதுல்லா என நான்கு முஸ்லிம்களை வேட்பாளாராக களமிறக்கி உள்ளது 
இது தவிர தனது கூட்டணியில் உள்ள முஸ்லிம்லீக்கிற்கு தனது சின்னத்திலேயே 
மூன்று தொகுதிகளை கொடுத்துள்ளது... அதிமுக முஸ்லிம்களுக்கு என்றைக்குமே 
நம்பிக்கைக்குரிய தலைமையாக இல்லாதபோதும் இந்த தேர்தல்களத்தில் தன பங்கிற்கு 
ராணிபேட்டையில் சகோ.முகமது ஜான், ஆவடியில் சகோ.அப்துல் ரஹீம், திருச்சியில் 
சகோ.மரியம் பிச்சை ஆகிய மூவரை வேட்பாளராக்கி உள்ளது. அதே கூட்டணியில் 
உள்ள மமகவிற்கு மூன்று தொகுதிகளை தனி சின்னத்தில் போட்டியிடும் தகுதியுடன் 
ஒதுக்கியுள்ளது... 
 
ரணகளதிற்கு பெயர்பெற்ற காங்கிரஸ் கட்சிகூட கிருஷ்ணகிரியிலும் இராமநாதபுரதிலும்
முஸ்லிம்களையே வேட்பாளராக்கி உள்ளது. (முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு போன்ற 
ஜீவாதார கோரிக்கைகளை காங்கிரஸ் எள்ளிநகையாடி வருவதை  கவனிக்க வேண்டும்)
முதன் முறையாக பெரிய கூட்டணி பலத்துடன் தேர்தலை சந்திக்கும் தேமுதிகவும்
திருவாடனை தொகுதியில் சகோ.முஜிபுர்ரஹ்மான் என்கிற முஸ்லிம் வேட்பாளருக்கு
வாய்ப்புகொடுதுள்ளது.
 
பலவிதமான தியாகங்கள் போராட்டங்கள் இவைகளை கடந்து அரசியல் ஆளுமையாக
வளர்ந்துவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது உளுந்தூர்பேட்டை வேட்பாளராக
சகோ.முகமது யூசுப் என்கிற முஸ்லிமைத்தான் நிறுத்தி இருக்கிறது... விசிகவின்
இந்த வளர்ச்சியில் ஆரம்பகாலத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு ஏதுமில்லை. விசிக
வளர்ச்சி பாதையில் வேகமாக பயணிக்க துவங்கிய பிறகே முஸ்லிம்களின் பங்களிப்பு
விசிகவில் ஏற்பட்டது. இருப்பினும் விசிக தனது கொள்கை முழக்கத்திற்கு அடிதளமிட
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற எப்படியும் எட்டு தொகுதிகளில் வெற்றிபெற
வேண்டும் என்கிற கட்டாயம் இருந்தபோதும் எதிர்பார்த்ததைவிட மிக குறைவான தொகுதிகளை
திமுக தலைமையால் ஒதுக்கபட்டிருந்த போதும் இரண்டு பொது தொகுதியை போராடி பெற்று
ஒரு தொகுதியில் முஸ்லிம் வேட்பாளரை களமிறக்கி உள்ளது.
 
ஆனால்...
ஆனால்...
ஆனால்...
தனது சமுதாயத்தின் இளைஞர்களின் உண்ணதமான உயிர் தியாகத்தின் மூலமாக 
அரசியல் பாதையில் அடி எடுத்துவைத்த பாட்டாளி மக்கள் கட்சி... என்னவெல்லாமோ 
போராடிபார்த்தும் "மரம்வெட்டி கட்சி" என்கிற பெயரை மாற்றமுடியாமல் திண்டிவனம் 
தைலாபுரம் தோட்டத்தை தாண்ட முடியாமல் அரசியல் அனாதையாக நின்ற பொது 
கைகொடுத்து மக்களிடம் அங்கீகாரம் பெற்றுதந்தவர்கள் முஸ்லிம்களும் தலித்துகளும் 
என்பதை மறந்துவிட்டு நாங்கள் ஜாதிகட்சிதான் என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளது...
 
வடக்கே வன்னியர்கள்... தெற்க்கே தேவேந்திரர்கள்... இணைப்பு பாலமாய் இஸ்லாமியர்கள்...
இந்த முழக்கம் இன்று மருத்துவர் அய்யாவிற்கு மறந்துபோய்விட்டது... 
சமுதாய தந்தை ஷஹீத் பழனிபாபா அவர்கள் ஒவ்வொரு குக்கிராமங்கள் தோறும் 
முஸ்லிம்கள் மத்தியில் மருத்துவரை அடையாள படுத்தியது மறந்துபோய்விட்டது... 
தனது தொழிலைக்கூட விட்டுவிட்டு முழுநேரமும் பாமகவின் வளர்ச்சி பணிகளிலேயே 
மூழ்கி இருந்த பெரியவர் குணங்குடி ஹணிபா அவர்களின் சேவை இப்போது மருத்துவருக்கு 
மறந்துபோய்விட்டது... எங்கெல்லாம் எதிர்ப்புகள் உள்ளதோ அங்கெல்லாம் ஓடோடி சென்று 
கட்சியை வளர்த்த அண்ணன் கே.எம்.சரீப் அவர்களை மருத்துவருக்கு மறந்துபோய்விட்டது... 
 
எண்பதுகளின் இறுதியில் துவங்கப்பட்ட பாமகவை மக்களிடம் கொண்டு செல்ல 
அன்றைக்கு முஸ்லிம்களும் தலித்துகளும் தேவை பட்டார்கள் சொற்ப வாக்குகள்தான் 
பெறமுடியும் என தெரிந்தும் கட்சியை அறிமுகபடுத்த தேர்தல் களம்தான் சரி என்பதால் 
பெரும் பொருளாதாரத்தை செலவலித்து தேர்தலில் போட்டியிடிடார்கள். ஆனால் பெரிய 
கட்சிகளின் கூட்டணியுடன் போட்டியிட வாய்ப்பு கிடைத்தவுடன் பேருக்கு சில தலித்துகளுக்கு 
வாய்ப்புகள் கொடுத்துவிட்டு அவர்கள்மீது அடக்குமுறையை ஏவி கட்சியைவிட்டே 
வெளியேற செய்தார்கள்... 2001 தேர்தலில் வந்தவாசி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 
தேர்வுசெய்யபட்ட அண்ணன் மதுரை முருகவேல் ராஜன் போன்றவர்கள் இன்று ஏன் 
பாமகவில் இல்லை...? தனது ஆளுமை பலத்தால் பாமகவை தேவேந்திர மக்களிடம் 
கொண்டு சென்ற அண்ணன் ஜான் பாண்டியன் அண்ணன் பசுபதி பாண்டியன் போன்றோர் 
ஏன் பாமகவைவிட்டு வெளியேறினார்கள்...? 
 
ஆனால் இவற்றில் கொடுமை தனித்து களம்கண்ட காலத்தில் முஸ்லிம்களை 
பெருவாரியாக வேட்பாளராக்கிய பாமக கூட்டணி பலத்துடன் களம்கானும் இந்த 
மூன்றாவது தேர்தலிலும் ஒரு முஸ்லிமிற்கு கூட வாய்ப்பளிக்கவில்லை... இது 
இன்றும் அந்த கட்சியில் எந்தவிதமான அதிகார பதவிகளும் பெறாமல் விசுவாசத்துடன் 
செயலாற்றும் முஸ்லிம்களுக்கு மட்டும் பாமக செய்துள்ள துரோகமல்ல... 
 
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...!!! 
ஒரு தலித்தை முதல்வராக்குவோம் இதுவும் மருத்துவர் அய்யாவின் முழக்கம்தான் 
ஆனால் இன்று தேர்தலில் தலித்துகளுக்கு ஒதுக்கிய தொகுதிகள் வெறும் மூன்று... 
 
மருத்துவர் அய்யா அவர்களே... 
உங்கள் துரோகத்திற்கான பரிசை நீங்கள் நிச்சயமாக வரும் மே 13 அன்று பெறுவீர்கள் 
அந்த பரிசு கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் உங்களுக்கு வழங்கிய மகிழ்ச்சியைவிட 
அதிகமான மகிழ்ச்சியை தரும்... 
 
ஆம்... 
துரோகத்திற்கான பரிசை பாமக போட்டியிடும் 30 தொகுதிகளிலும் உள்ள இஸ்லாமிய 
வாக்காள பெருமக்களும் தொப்புள்கொடி உறவுகளான தலித் சமூக மக்களும் பாமகவிற்கு 
வழங்கி பாடம் புகட்ட வேண்டும்... இனிவரும் காலங்களில் நம்மை ஒதுக்கிவிட்டு யாரும் 
அரசியல் செய்ய முடியாது என்பதை நிருபிக்க வேண்டும்... 
 
யாராக இருப்பினும் "துரோகத்தின் பரிசு தோல்வி" என்பதை விளங்க செய்வோம்.... 

கருத்துகள் இல்லை: