Subscribe:

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

வாருங்க‌ள் தோழ‌ர்க‌ளே! - சிராஜூதீன்


ஏற‌க்குறைய‌ 20 ஆண்டுக‌ளின் பின் நான் ஊரில் நீண்ட‌ நாட்க‌ள் இருக்கின்ற‌ வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். ஊரில் ஏற்ப‌ட்டுள்ள‌ மாற்ற‌ங்க‌ள் அனைத்தையும் நிதான‌மாக‌க் க‌வ‌னிக்கின்ற‌ வாய்ப்பும் கிடைத்திருக்கிற‌து.

க‌ட்டிட‌ங்க‌ளும், சாலைக‌ளும், வாக‌ன‌ங்க‌ளும் அதிக‌ரிப்ப‌து ம‌ட்டும் தான் ஒரு ஊரின் முன்னேற்ற‌ம் என்றால், ஆம்...நம‌து ஊரும் நிறைய‌வே முன்னேறி உள்ள‌து தான். மிதி வ‌ண்டியில் ப‌ள்ளி,க ‌ல்லூரி போவ‌தே பெரிதென‌ இருந்த‌ ஒரு கால‌ம் போய் ஸ்கூட்ட‌ர், பைக் என‌ மாண‌வ‌ர்க‌ள் ப‌ற‌க்கின்ற‌ காட்சியைப் பார்க்கும் போது ஊர் முன்னேறி விட்ட‌தோ என‌ என்ணத்தான் தோன்றுகிற‌து.

ஆனால்,ஊர் மாறி இருக்கிற‌தே த‌விர‌ முன்னேற‌வில்லை. ஒரு ஊரின் முன்னேற்ற‌ம், அவ்வூரின் இளைஞ‌ர்க‌ள் ம‌த்தியில் ஏற்ப‌டுகின்ற‌ முன்னேற்ற‌த்தைப் பொறுத்த‌து தான். இளைஞ‌ர்க‌ள் முன்னேறினால் ம‌ட்டுமே ஊர் முன்னேறிய‌தாக‌க் கொள்ள முடியும்.

எங்க‌ள் இள‌மைக் கால‌த்தில்,சுமார் 35 ஆண்டுக‌ட்கு முன், க‌ணிணி, தொலைக்காட்சி, கைபேசி என‌ எந்த‌ சாத‌ன‌மும் கிடைக்க‌ப் பெறாத‌ போது, மாலை வேளைக‌ளில் ந‌ண்ப‌ர்க‌ள் கூட்ட‌மாக‌க் கூடி இர‌வு வ‌ரை ப‌ல்வேறு விச‌ய‌ங்க‌ளைப் பேசி, விளையாட்டில் ஆர்வ‌முள்ள‌வ‌ர்க‌ள் மைதான‌ங்க‌ளில் விளையாடிப் பொழுதைக் க‌ழித்தார்க‌ள். இன்றைய‌ நிலை அதுவா? கிடைக்கின்ற‌ சாத‌ன‌ங்க‌ளைப் ப‌ய‌ன் ப‌டுத்துகிற‌ முறையில் ப‌ய‌ன்ப‌டுத்தினால் இருக்கின்ற‌ நேர‌மே போதாது. ஆனால்,இன்றும் அதே போல், குறிப்பிட்ட‌ இட‌ங்க‌ளில் கூடிப் பேசிச் சிரித்துப் பின் பிரியும் இளைஞ‌ர் கூட்ட‌ம் அன்றை விட‌ அதிக‌ம். ந‌ண்ப‌ர்க‌ளோடு கூடிப் பேசுவ‌தை விட‌வும் ம‌ன‌தை லேசாக்கும் விச‌ய‌ம் வேறு எதுவும் இல்லை. அதுவும், இன்றைய‌ ப‌ர‌ப‌ர‌ப்பான‌ வாழ்வில் இந்த‌ க‌ல‌ந்தாட‌ல் மிக‌ அவ‌சிய‌மான‌ ஒன்று என்று கூட‌ச் சொல்ல‌லாம்.

ஆனால்,அதே ந‌ண்ப‌ர்க‌ளோடு, முழுவ‌துமாய்ப் பேச்சிலே ஈடுப‌டாம‌ல், அதே நேர‌த்தின் ஒரு ப‌குதியை, அதே ந‌ண்ப‌ர்க‌ளோடு த‌ன‌க்கும், ஊருக்குமாய்ச் செல‌வ‌ழிக்க‌லாமே?ஊரின் ஜ‌ன‌த் தொகை, வ‌ச‌திக‌ள் அதிக‌ரித்த‌து போல‌வே பிர‌ச்ச‌னைக‌ளும் அதிக‌த்துக் கொண்டுதான் உள்ள‌ன‌. இவ‌ற்றை எல்லாம் இளைஞ‌ர்க‌ள் கூட்ட‌ம், பெரியோரின் ஆலோச‌னையோடு, கையில் எடுத்தால் பிர‌ச்ச‌னைக‌ள் ஒன்ற‌ன் பின் ஒன்றாக‌ப் புற‌முதுகிட்டு ஓடிவிடாதா? இளைஞ‌ர்க‌ளால் சாதிக்க‌ முடியாத‌து என்று ஏதாவ‌து இருக்கிற‌தா?

முன்பெல்லாம் ஒரு வார்த்தை ஆங்கில‌த்தில் பேசினாலே "ப‌டிப்பாளி பார்றா"என்பார்க‌ள். இன்றோ,ஆங்கில‌ம் இல்லாம‌ல் எங்குமே பிழைக்க‌ முடியாது என்றாகிப் போன‌ பின்னும், ந‌ம் இளைஞ‌ர்க‌ள் ம‌த்தியில் ஆங்கில‌ம் க‌ற்க‌வோ,பேச‌வோ ஆவ‌ல் இல்லை. பூமிப்ப‌ந்தில் இன்று ந‌ம‌தூர் இளைஞ‌ர்க‌ள் இல்லாத‌ இட‌மே கிடையாது. அவ‌ர்க‌ளைக் கேட்டால் சொல்வார்க‌ள்,ப‌ருவ‌த்தே அதைப் ப‌யிலாத‌த‌ன் வ‌ருத்த‌த்தை. ஒரு உண்மையை ஒப்புக்கொள்ள‌த்தான் வேண்டும். நான் வ‌ட‌ நாட்டின் ப‌ல‌ ப‌குதிக‌ளில் பார்த்துள்ளேன், முதுக‌லை ப‌டித்த‌வ‌ர்க‌ள் கூட‌ முழுதாக‌ நாலு வ‌ரி ஆங்கில‌ம் பேச‌ ஆயாச‌ப் ப‌டுவார்க‌ள்.இன்னும் சில‌ ப‌குதிக‌ளில் எட்டாவ‌து வ‌குப்பு முத‌ல் தான் ஆங்கில‌ம் என்ற‌ ஒரு பாட‌மே இருக்கும். நாம் அப்ப‌டி இல்லை. த‌மிழ‌ர்க‌ளின் ஆங்கில‌த்திற்கென்றே த‌னி ம‌திப்பு இருக்கிற‌து. ஆனாலும், உல‌க‌ம் ஒரு பெரிய‌ கிராம‌மாகிப் போன‌ இந்த‌ வேளையில், நாம் ந‌ம‌து ஆங்கில‌ மொழி அறிவை இன்னும் வ‌ள‌ப் ப‌டுத்திக் கொள்ள‌ வேண்டும் என்ப‌து கால‌த்தின் க‌ட்டாய‌மும் கூட‌.

மொழி என்ப‌து நாம் சொல்ல‌ விரும்புவ‌தைப் பிற‌ருக்குப் புரிய‌ வைக்கும் ஒரு ஆயுத‌ம், அவ்வ‌ள‌வே. இல‌க்க‌ண‌ம் தெரியாது, present tense, past tense ச‌ரியாக‌ வ‌ராது என்றெல்லாம் யோசிக்காம‌ல் நாம் சொல்வ‌தைப் பிற‌ர் புரிந்து கொன்டால் போதும் என்று எண்ணிக் கொண்டு பேச‌, எழுத‌ ஆர‌ம்பித்தாலே கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் த‌வ‌றுக‌ள் பிடிப‌ட்டு முழு நிலைக்கு வ‌ந்து விட‌ முடியும். பிற‌றோடு சோதித்துப் பார்க்க‌ யோச‌னையாக‌ இருந்தால் ந‌ண்ப‌ர்க‌ளுக்கிடையிலேயே த‌ப்பும் த‌வ‌றுமாக‌த் தொட‌ங்கி ஒருவ‌ருக்கொருவ‌ர் திருத்தித் திருத்தி ச‌ரி செய்து விட‌லாமே. ஆங்கில‌ தின‌ச‌ரிக‌ள்,ஆங்கில‌ சேன‌ல்க‌ள், ஆங்கில‌ச் செய்திக‌ள் இவ‌ற்றோடு ந‌ம் தொட‌ர்பை அதிக‌ரிக்க‌ அதிக‌ரிக்க‌ ந‌ம‌து புல‌மையும் அதிக‌ரிக்குமே.அத‌ற்காக‌, இளைஞ‌ர்க‌ள் தாமாக‌வே த‌ங்க‌ளைத் த‌யார் ப‌டுத்திக் கொள்ள‌ வேண்டும் என‌ மூத்தோரும் இருந்து விட‌க் கூடாது. அவ‌ர்க‌ளும் அத‌ற்குண்டான‌ அடிப்ப‌டைத் தேவைக‌ளைத் த‌யார் செய்து த‌ருவ‌து மிக‌ மிக‌ அவ‌சிய‌ம்.

ப‌ள்ளிக‌ள்,க‌ல்லூரியில் மாண‌வ‌ர்க்கிடையே ந‌ட‌ந்த‌ பாட்டுப் போட்டி,பேச்சுப் போட்டி, க‌ட்டுரைப் போட்டி போன்ற‌ இன்ன‌ பிற‌ போட்டிக‌ள் ந‌ட‌த்துவ‌து என்ப‌து இன்று மிக‌ மிக‌ அரிதாகிப் போன‌து. இவை எல்லாம் எத்துணை இளைஞ‌ர்க‌ள்/மாண‌வ‌ர்க‌ள் முன்னேற‌த் தூண்டுகோள்க‌ளாக‌ இருந்த‌ன‌ என்ப‌து எல்லோருக்கும் தெரிந்த‌ ஒன்று தான். இருந்தும்,இவைக‌ளின் முக‌வ‌ரியை ந‌ம‌தூர் ப‌ள்ளிக‌ள்,க‌ல்லூரியில் தேடுவ‌து என்ப‌து க‌டின‌மான‌ ஒன்றாக‌த் தான் உள்ள‌து.சால‌ம‌ன் பாப்பையா,த‌மிழ்க்குடிம‌க‌ன்,ஷாஜ‌கான் க‌னி, ப‌ர‌ம‌சிவ‌ம், சிற்ச‌பேச‌ன், த‌மிழ‌ண்ண‌ல் போன்ற‌ பேச்சுல‌க‌ சாம்ப‌வான்க‌ளை எல்லாம் நான் பார்த்த‌து, அவ‌ர்க‌ள் பேச்சைக் கேட்ட‌து எல்லாம் ந‌ம‌தூரில், நம் ப‌ள்ளியில் தான். பிற்கால‌த்தில் ப‌ல‌ ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ளில் மீண்டும் நான் இவ‌ர்க‌ளை எல்லாம் பார்த்தேன், கேட்டேன் என்றாலும் அன்று கேட்ட‌வை தான் இன்றும் என் நினைவில் உள்ளது.

மாத‌ம் தோறும் பேச்சாள‌ர்க‌ளின் அணிவ‌குப்பு தொட‌ருமே. இன்றெங்கே அவை? இது அன்றாட‌ம் பாட‌த்தோடு போராடும் இளைஞ‌னுக்கு ஒரு புத்துனண‌ர்வை/ மாற்ற‌த்தைத் த‌ராதா? செமினார்க‌ள் என்ப‌வை அறிஞ‌ர்க‌ளின் ஆற்ற‌லைக் காட்டும். ஆராய்ச்சிக்கு உத‌வும். இது போன்ற‌ பேச்சு மேடைக‌ள் தான் மூளைக்கு ஓய்வும், வேலையும் ஒரு சேர‌த் த‌ரும்.நீங்க‌ளும் திற‌மையாள‌ர்க‌ளாக‌ மாறினால் புக‌ழ் பெற‌லாம் என‌ வாய் மொழியாக‌ப் போதிப்ப‌தைக் காட்டிலும், ந‌ம் ப‌ள்ளிக‌ளில்,க‌ல்லூரியில் க‌ற்று இன்று புக‌ழோடு விள‌ங்கும் ப‌ழைய‌ மாண‌வ‌ர்க‌ளை அழைத்து வ‌ந்து அவ‌ர்க‌ள் வென்ற‌ வித‌த்தைப் பேச‌ வைத்தால், நாமும் ஒரு நாள் இப்ப‌டி நாம் ப‌டிக்கும் இதே க‌ல்விக் கூட‌த்தில், இதே மேடையில் நின்று நாம் ஜெயித்த‌ க‌தையையும் சொல்ல‌லாமே என்ற‌ எண்ண‌ம் தோன்றாதா?

டாக்ட‌ர் சித்திக், டாக்ட‌ர் குணசேக‌ர‌ன், அமைச்ச‌ர் த‌மிழ‌ர‌சி, இய‌க்குன‌ர்க‌ள் ம‌கேந்திர‌ன், அதிய‌மான், சீமான், முஹ‌ம‌து அலி..... இன்னும் எண்ணில‌ட‌ங்காதோர் இருக்கிறார்க‌ளே த‌ங்க‌ள் க‌ருத்துக்க‌ளைப் ப‌கிர்ந்து கொள்ள‌, ப‌ழைய‌ மானண‌வ‌ர்க‌ளாய்.வாருங்க‌ள் தோழ‌ர்க‌ளே, விதையை நாம் ந‌டுவோம், விருட்ச‌த்தின் நிழ‌லை ந‌ம் வ‌ருங்கால‌ம் அனுப‌விக்க‌ட்டும்!

நன்றி: இளையான்குடி வட்டம் சிங்கப்பூர்

கருத்துகள் இல்லை: