Subscribe:

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

மரியாதைக்குரிய மருத்துவர் அய்யா அவர்களுக்கு...


மரியாதைக்குரிய மருத்துவர் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. திராவிட முன்னேற்றக் கழகத்தின்
தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிடவிற்பது
அறிந்து மிக்க மகிழ்ச்சி...
பா.ம.க இடம்பெறும் கூட்டணியே வெற்றி கூட்டணி என்கிற வரலாற்று
உண்மை மீண்டும் மெய்பட உணர்வுபூர்வமாக வாழ்த்துகிறேன்...
பா.ம.க.வின் ஆரம்பகாலத்தில் எனது சொந்த மாவட்டமான சிவகங்கையிலும்
தங்களின் விருப்பபடி ஏனைய பிற மாவட்டங்களிலும் நானும் என்னை போன்ற ஆயிரக்கணக்கான ஷஹீத் பழனிபாபா அவர்களின் தொண்டர்களும் கட்சி பணியாற்றியவர்கள் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்...

எனது சொந்த ஊரான இளையான்குடியில் 1994ம் ஆண்டு ஜூலை 4ம் நாள்
தாங்களும் தலைவர் பாபா மற்றும் அன்றைய பா.ம.க.பொருலாளர் அண்ணன் குணங்குடி ஹனிபா ஆகியோர் கலந்துகொண்ட மிக சிறப்பான பொதுக்கூட்டம் நடத்தி தங்களின் நன்மதிப்பை பெற்றவன் நான்.

அதை தொடர்ந்து 1996ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.
அமரர்.வாழப்பாடி இராமமூர்த்தி அவர்கள் தலைமையிலான திவாரி காங்கிரசுடன் இணைந்து போட்டியிட்டபோதே இளையான்குடி சட்டமன்ற தொகுதியில் சகோதரர்.அ.இராமு அவர்களை வேட்பாளராக நிறுத்தி கணிசமான வாக்குகளை பெற்றதையும் நினைவுகூறுகிறேன்.
காலசூழலில் நாங்கள் தொடர்ந்து பா.மக.வில் பணியாற்ற இயலாமல் போனது இருப்பினும் தங்களின் மீது நாங்கள் கொண்ட அன்பு என்றுமே குறைந்தது இல்லை காரணம் எமது தலைவர் பாபா அவர்கள் பல தலைவர்களுடன் இணைந்து பணியாற்றி இருந்தாலும் தங்களின் மீது எவ்வளவு மரியாதையும் பாசமும் வைத்திருந்தார் என்பதை அருகில் இருந்து பலமுறை கண்ட என்னால் உணரமுடிந்தது.

அரசியல் நிர்பந்தங்களின் காரணமாக தமிழக முஸ்லிம்களின் எதிர்கால அரசியல் களமாக கவனிக்கப்பட்ட பா.ம.க. காலப்போக்கில் முஸ்லிம்களைவிட்டு சற்று விலகித்தான் போனது என்பதை மறுக்கமுடியாது.

சுமார் 7 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு அதாவது தலைவர் ஷஹீத் பழனிபாபா அவர்கள் படுகொலை செய்யப்பட்ட 1997 க்கு பிறகு கடந்த 2004 ம் ஆண்டு தங்களை சென்னையுள்ள பசுமைத்தாயகம் அறகட்டளை அலுவலகத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆம் அண்ணன் ஏ.வி.ஏ.கஸ்ஸாலி அவர்கள் தன்னை மீண்டும் பா.ம.க.வில் இணைத்துக்கொள்ள வரும்போது என்னை அழைத்து வந்தார்.

இணைப்பு சுமூகமாக முடிந்த பிறகு நாங்கள் அனைவரும் தங்களின் அறையைவிட்டு வெளியேறும்போது தாங்கள் என்னை மட்டும் அழைத்தீர்கள் வேங்கை நலமாக இருக்கிறாயா?என உரிமையுடன் தாங்கள் கேட்டபோது நான் சற்று கலங்கிதான் போனேன். தொடர்ந்து நீங்கள்
என்னிடம் உன்னை போன்ற வீரியமிக்க இளைஞர்கள் மீண்டும் பா.ம.கவின் பணிகளுக்கு திரும்ப வேண்டும் என கேட்டுகொண்டீர்கள். நான் அப்போது இருந்த அமைப்பின் விபரத்தை சொல்லி நாகரீகமாக மறுத்தேன். தொடர்ந்த நீங்கள் உன்னை போன்றவர்களுக்கு பா.ம.க.வின் மீது நம்பிக்கை குறைந்துவிட்டது கஸ்ஸாலி மூலமாக நான் அதை சரி செய்கிறேன் என்று உறுதி அளித்தீர்கள். நான் மகிழ்ச்சியுடன் விடைபெற்று வந்தேன்.
தங்கள் சந்தித்தபோது என் மனதில் மகிழ்ச்சியைவிட பா.ம.க.வை முஸ்லிம்கள் மத்தியில் வெகுவாக கொண்டுசென்ற தலைவர் பாபா அவர்கள் படுகொலை செய்யப்பட்டபோது பா.ம.க. போதிய எதிர்ப்பை பதிவு செய்யவில்லை என்கிற கோபமும் கவலையும்தான் நிறைந்திருந்தது.

எனது கவலைகளை அலுவலகத்தின் வெளியே நின்றிருந்த முன்னாள் மத்திய இணையமைச்சரும் எனது நெருங்கிய நண்பருமான சகோதரர்.அ.கி.மூர்த்தியிடமும் தெரிவித்தேன். அவரும் நடந்தவைகளைமறந்துவிட்டு பா.ம.க.வை வலுபடுத்த ஒன்றுபட்டு செயல்படுவோம் என்று சொன்னார்.நான் அவரிடம் சொன்னேன் தலைவர் பாபா அவர்களின் தொண்டர்களின் பிரதிநிதியாகவே அண்ணன் கஸ்ஸாலி அவர்கள் பா.ம.க.வில் இணைந்துள்ளார் அவருக்கு பா.ம.க.வில் கொடுக்கப்படும் அங்கீகாரத்தை பொறுத்தே பா.ம.க. முஸ்லிம்களை ஆதரவை மீட்க முடியும் என சொலிவிட்டு வந்தேன்.

வெகு அருகாமையில் வந்துவிட்ட நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அண்ணன் கஸ்ஸாலியும் சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி வெற்றிக்கு துணை நின்றார். அவருக்கு மாநில துணைத்தலைவர்
பொறுப்புதந்து சிறப்பு செய்தீர்கள்.

தொடர்ந்து முஸ்லிம்களின் ஜீவாதார கோரிக்கையான தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி பா.ம.க. நடத்திய சனநாயக போராட்டங்களை எல்லாம் முஸ்லிம்களின் மேலான கவனத்திற்கு கொண்டு சென்று பா.ம.க.மற்றும் முஸ்லிம்களுக்கான இடைவெளியை அண்ணன் கஸ்ஸாலி
வெகுவாக குறைத்தார் என்பதை சத்தமிட்டு சொல்லலாம்.

அதனை தொடர்ந்து கடந்த சட்டமன்ற தேர்தலும் வந்தது இன்று தாங்கள் இணைந்துள்ள இதே தி.மு.க கூட்டணியில் இப்போது ஒதுக்கப்பட்டுள்ளதுபோலவே 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.நாங்கள் வெகுவாக எதிர்பார்த்தோம் குறைந்தபட்சம் ஐந்து முஸ்லிம்களுக்காவது தங்கள் வாய்ப்பு தருவீர்கள் என்று. ஆனால் எங்கள் ஆசை நிராசையானது சரி அண்ணன் கஸ்ஸாலி ஒருவராவது வேட்பாளராகுவார் என அப்போது நம்பினோம் அதிலும் மண் விழுந்தது.

அய்யா அவர்களே இதோ இப்போதும் தமிழகத்தின் மறு சட்டமன்ற தேர்தல்களம் அதே திமுக கூட்டணியில் அதே எண்ணிகையிலான தொகுதிகள் முஸ்லிம்களின் நிலையும் பா.ம.க.வில் அதே மாதிரி அமைந்துவிடுமோ என்பதுதான் என்னை போன்றோரின் அய்யம்.

அய்யா அவர்களே பழைய பாசத்தில் பழைய உரிமையில் பா.ம.க.வின் ஆரம்பகால கட்டமைப்பில் எங்களின் பங்களிப்பும் இருந்தது என்கிற தங்களுக்கு தெரிந்த உண்மையில் கேட்கிறேன்... ஆரம்பகாலங்களில் பா.ம.க. நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்குபெற்று சிறை சென்றவன் குறிப்பாக 1995 ம் ஆண்டு மார்ச் 13 ம் நாள் சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பாக இஸ்லாமிய தடா கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நடைபெற்ற "தடா" எதிர்ப்பு பேரணியில் பேரணி தளபதிகளில் ஒருவனாக அணிவகுத்து காவல்துறையின் காட்டுமிராண்டிதனமான தாக்குதலில் கை எலும்பு முறிந்து தங்களுடனும் தலைவர் பாபா அவர்களுடனும் வேலூர் மத்திய சிறையில் இருந்ததையும் நினைவுகூர்ந்து கேட்கிறேன்...

அண்ணன் கஸ்ஸாலி போன்ற சில முஸ்லிம்கள் பா.ம.க.வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்று களமிறங்கும்போது நிச்சயமாக முஸ்லிம்களின் மரியாதை தங்களை நோக்கி இரட்டிப்பாகும் என்பதில்மாற்று கருத்தில்லை...

என்றும் தங்களின் அன்பிற்குரிய
வேங்கை.சு.செ.இப்ராஹீம்
இளையான்குடி

1 கருத்து:

கிராமத்தான் சொன்னது…

தங்களின் கருத்துக்கு பாமக வில் உள்ள நாங்கள் வரவேற்கிறோம் நண்பரே....

தங்கள் ஆதங்கம் வெகு விரைவில் நிறைவெறும் இனி தமிழகத்தை நல்வழி படுத்த மருத்துவர் அய்யாவை விட்டால் வெறுயாருமில்லை...