நேற்று திங்கள் கிழமை காலை சுமார் பத்துமணியளவில்
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் இருந்து மகிழுந்து
மூலமாக ராமநாதபுரம் நோக்கி பயணம் மேற்கொண்டிருந்த
எனது நட்பிற்குரிய சகோதரர் எஸ்.பர்வீஸ் கான் அவர்களின்
தகப்பனார் ஹாஜி.செய்யது முகமது அவர்கள் எதிரே வந்த
வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே வபாத்தானார்கள்... (இன்னயிலாஹா...) என்கிற செய்தியறிந்து சொல்லொன்னா துயரம் அடைந்தேன்...
பார்பதற்கும் பழகுவதற்கும் இனிய மனிதரான அன்னார் அவர்களின் இழப்பு
நெஞ்சை கீறி பிளந்தது... அவர்களின் மறுமை வாழ்வுக்கு துஆ செய்யும் அதேவேளையில் சகோதரர் பர்வீஸ் கான் அவர்களை மட்டுமல்ல எங்கள் அனைவரையுமே தனது பிள்ளைகளாக வாஞ்சையோடு வழிநடத்திய அன்னார் அவர்களை பற்றிய நினைவுகளை இங்கு மனவேதனையோடு பதிகிறேன்...
போய் வாருங்கள் அத்தா போய் வாருங்கள்...
வெள்ளை உடையும் பிள்ளை நடையும்...
மலர்ந்த முகமும் புலர்ந்த மொழியும்...
அதிர்ந்து பேசாத அமைதியின் உருவும்...
நிமிர்ந்து பார்க்காத அடக்க நெறியும்...
ஒழுக்கமும் பாடம் கற்றுக்கொள்ள விரும்பும்
ஓவியமாய் வாழ்ந்தவரே...
ஈகை குணத்தில் ஈடில்லா கொடையுள்ளம்கொண்டு
காவியமாய் வாழ்ந்தவரே...
மார்க்கநெறிகளை மனதில் தாங்கி கடமைகளை
கணக்காய் முடித்திட்ட நிறைவுகண்டு
போய்விட்டீரோ....
எதார்த்தமாய் உம்மை இழந்திருந்தால் இறைவிதி
என பொறுத்திருப்போமே...
விபத்தால் உம்மை இழந்ததினால்தானே
வீறுகொண்டு அழுகின்றோம்...
பிறகின்றபோதே இறப்பையும் உணர்த்துகிறான் இறைவன்
பலகீன மனது ஏற்றுகொள்ள மறுக்கிறதே...
இளகிய மனம்படைத்த எங்கள் அத்தா
விபத்தின் வேதனையை நீங்கள் எப்படி தாங்கினீர்கள்...
நினைக்கும்போதே எங்கள் நெஞ்சம் வெடிக்கிறதே
எம்மையும் அறியாமல் கண்ணீர் வழிகிறதே...
நட்பிற்கு இலக்கணமாய் இரண்டு செல்வங்களை
பர்வீசாய் ஜாகீராய் தந்த எங்கள் அத்தா...
நிறைவுபெற்ற வாழ்க்கையின் நிறைவாய்
இறைவனின் அழைப்பை நீங்கள் ஏற்றுகொண்டீர்கள்...
நாங்கள் அழமாட்டோம் யாரையும் அழவிடமாட்டோம்
இனி எங்கள் துஆக்கள் எல்லாம் உங்கள் மறுமையின் வெற்றிக்காக...
போய் வாருங்கள் அத்தா போய் வாருங்கள்...
இன்று நீங்கள் இன்ஷாஅல்லாஹ் நாளை நாங்கள்
இறைவன் நாடினால் மீண்டும் மறுமையில் சந்திப்போம்...
உங்கள் மறுமையின் வெற்றிக்கு துஆக்களுடன்...
வேங்கை.சு.செ.இப்ராஹீம்
குடும்பத்தார் மற்றும் நண்பர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக